SJB போராட்டத்திற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக டெக்னிக்கல் சந்திக்கு பெருந்திரளானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் (20.02.2023) போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் மக்களுக்கு அல்லது பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் அல்லது இடையூறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அரசியலமைப்பின் பிரகாரம் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் காவல்துறை ஒருபோதும் தலையிட மாட்டார்கள்.

ஆனால் சிலர் தற்போதுள்ள சட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்று கூறுகிறோம்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.”என தெரிவித்தார்.

போராட்டம் காரணமாக புறக்கோட்டை, ஓல்கெட் மாவத்தை முற்றாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.