அதிகாரப் பகிர்வு நேரடியாக எதிர்மறைத் தாக்கம் செலுத்தப்போகின்ற சமூகங்கள் முஸ்லிம்களும் ,மலையகத்தவருமே !

சமஷ்டி- ஒற்றையாட்சி

சமஷ்டியில் இடம்பெறுவது அதிகாரப்பிரிப்பு
(division of power)
ஒற்றையாட்சியில் இடம்பெறுவது அதிகாரப்பகிர்வு ( devolution of power)

சமஷ்டியில் மத்திய அரசுக்கு உரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. ( supremacy)
மாகாணத்திற்குரிய அதிகாரத்தில் அது மீயுயர் தன்மையுடையது. (supremacy)

அதாவது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தில் மாகாணம் தலையிட முடியாது.
மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தில் மத்தி தலையிடமுடியாது. ( உள்நாட்டைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட தனிநாடு போன்றவைதான மாகாணங்கள்)

இதனால் மத்திய- மாகாண அதிகாரப் பிரிப்பை கிடையான அதிகாரப்பிரிப்பு என அழைக்கப்படுகிறது. (Horizontal division of power) ஏனெனில் மத்தியும் மாகாணமும் தத்தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் சம மட்டத்தில் இருக்கின்றன. ஒன்றிற்கு ஒன்று கீழானதல்ல.

ஒற்றையாட்சியில் மத்திய அரசின் அதிகாரம் மீயுயர் தன்மையுடையது. ( supreme)
மாகாண அரசின் அதிகாரம் அதற்குக் கீழானது. ( subordinate)

அதாவது, மத்திய அரசின் அதிகாரத்தில் மாகாண அரசு தலையிட முடியாது. மாகாண அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியும்.

இதனால், இவ்வதிகாரப்பகிர்வை செங்குத்தான அதிகாரப்பகிர்வு ( Vertical devolution of power) என அழைக்கப்படுகிறது.

குறிப்பாக, சட்டவாக்க அதிகாரத்தைப் பொறுத்தவரை சமஷ்டியில் முழுமையான சட்டவாக்க அதிகாரம் ( Legislative power) வழங்கப்படுகிறது.
ஒற்றையாட்சியில் உப சட்டவாக்க அதிகாரமே (Subordinate legislative power) வழங்கப்படுகிறது.

மாகாணங்களில் வாழும் மாகாண சிறுபான்மைகளைப் பொறுத்தவரை ஒற்றையாட்சியில் மாகாண அரசினால் அம்மாகாண சிறுபான்மைகள் பாதிக்கப்படும்போது மத்திய அரசு தலையிட வாய்ப்பிருக்கிறது. சமஷ்டியில் அவ்வாறான வாய்ப்பில்லை.

மாகாண சிறுபான்மைகளுக்கு சட்டிக்குள் போடப்பட்ட கறியின் நிலையே.

முஸ்லிம்கள் எட்டு மாகாணங்களில் மிகவும் சிறுபான்மை.

அதிகாரப் பகிர்வு நேரடியாக எதிர்மறைத் தாக்கம் செலுத்தப்போகின்ற சமூகங்கள் முஸ்லிம்களும் மலையகத்தவருமே!

இப்பாதிப்புகளைத் தடுக்க நமக்குள் இருக்கும் நிலைப்பாடுகள் என்ன?

சகல முஸ்லிம் கட்சிகளையும் இணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை எடுக்கவைக்கும் முயற்சியில் கடந்த இரண்டொரு மாதங்களாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். சகல அரசியல் தலைமைகளுடனும் ஒரு பொது நிலைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசியிருக்கின்றோம். அதற்கான ஆரம்ப வரைபையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.

முடிந்தளவு சிவில் அமைப்புகளின் ஆதரவையும் கோர இருக்கின்றோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த முயற்சியில் வெற்றிபெற பிரார்த்தியுங்கள். தமிழ் சமூகத்திற்கு அதிகாரப்பகிர்வு தொடார்பாக தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. முஸ்லிம்களிடம் இதுவரை இல்லை.

அண்மையில்
ஜம் இய்யதுல் உலமாவின் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பேசும்போது, முதலில் தமிழ்கட்சிகளுடனும் அதன்பின்பு அனைத்துக் கட்சிகளுடனும் பேசுவோம்; என்றுதான் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள் தவிர்க்கமுடியாத ஓர் அங்கம்; என்பது இந்நாட்டு ஆட்சியாளர்களின் மனதில் அன்றும் இல்லை, இன்றும் இல்லை. அதனால்தான் அன்றும்கூட, அரச தரப்பிலேயே முஸ்லிம் தலைமைகள் அனுப்பப்பட்டன. தனித்தரப்பாக இல்லை.

அன்றைய பேச்சில் முஸ்லிம்களுடனும் மலையக மக்களுடனும்அவர்களுடைய பல பிரச்சினைகள் தொடர்பாக அதன்பின் பேசுவதாகவே குறிப்பிட்டார்.

அதாவது, முஸ்லிம்களின் பலதரப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; என்பதில் ஜனாதிபதிக்கு அக்கறை இருக்கிறது. அது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் வகிபாகத்திற்குரிய முக்கியத்துவம் ஜனாதிபதியின் அன்றைய பேச்சில் மிகவும் கீழிறக்கப்பட்டிருந்தது.

அதாவது,
அன்று, அரசு தரப்பு இன்று, தமிழ்க்கட்சிகளுடன் பேசியதன் பின்
சகல கட்சிகளுடனும் பேசும்போது முஸ்லிம்களுக்கும் கதிரை போடப்படும்.

சில முஸ்லிம் தலைமைகளைப் பொறுத்தவரை, நமக்கெதற்கு நிலைப்பாடு. தெற்கின் கடும்போக்குவாதிகள் ஒன்றையும் நடக்கவிடமாட்டார்கள். நாம் நிலைப்பாடுகளை எடுத்து ஏன் தமிழ் சமூகத்தைப் பகைக்கவேண்டும்? என்ற கருத்தில் இருக்கிறார்கள். அதாவது, தெற்கின் கடும்போக்குவாதிகளின் நிழலில் நாம் ஆறுதல் அடைவோம்; என்கிறார்கள். அதை இரஜதந்திரம் எனவும் நினைக்கிறார்கள்.

ஒருநாள், அக்கடும்போக்குவாதிகளின் நிலைப்பாடு மாறினால் முஸ்லிம்களின் நிலை.

புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைத் தீர்வில் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமான முஸ்லிம்களுக்கென்று எந்த நிலைப்பாடும் இல்லை, வட-கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்பதைத் தவிர.
மிகவும் கவலைக்குரியது.

சட்ட முதுமாணி,
YLS. ஹமீட்,
செயலாளர் நாயகம்,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ்,