அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாட்டின் முன்னேற்றமும் அதற்கான உத்தரவாதத்தை அளிப்பதற்கான இயலுமையுமே அமெரிக்காவின் தனித்துவம் என அவர் குறிப்பிட்டார்.
நெருக்கடி நிலையில் இருந்து அமெரிக்கா மாத்திரமே விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், 2 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு புதிதாக 12 மில்லியன் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
COVID நெருக்கடியால் நாட்டின் ஜனநாயகமும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் வீழ்ச்சியடையாமல், கீழ் மட்டத்திலிருந்து நடுத்தர வர்க்கத்திற்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் விருப்பத்துடனேயே நாட்டின் அதிபராக தாம் பொறுப்பேற்றதாக ஜோ பைடன் சுட்டிக்காட்டினார்.
ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர்பிலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இதன்போது விளக்கமளித்தார்.
வரி செலுத்துவதை தவிர்க்கும் குற்றவாளிகளை விரட்டியடிக்க ஊழல் எதிர்ப்பு குழுவினரை மூன்று மடங்காக அதிகரிக்க வேண்டும் எனவும் ஊழலை ஒழிக்க பயன்படுத்தப்படும் ஒவ்வொரு டொலரும் முறையாக வரி செலுத்துவோருக்கு பத்து மடங்கு நன்மையை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.