வாய்ச்சவால் விட்ட பிரதி அமைச்சரிடம் விசாரணை !

download (3)

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுமிடத்து இலஞ்ச ஊழல் விசாரணை பொலிஸ் பிரிவில் இருக்கும் கான்ஸ்டபிள் முதல் அனைவரையும் தூக்குமேடையில் ஏற்றி கொல்லுவார் என தென்மாகாண பிரதிஅமைச்சர் டீ.வி உபுல்,தெரிவித்திருத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமாராகமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த கருத்து தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார். ‘இலஞ்ச ஊழல் பிரிவில் கடைநிலை அதிகாரியில் இருந்து மேலதிகாரிகள் வரை பட்டியில் இட்டு கல் எறிந்து கொல்லுவார். விசப்பாம்பு எந்த நேரமும் பழிவாங்க துடிக்கும்’ என்றும் பிரதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

‘1989 களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்காலத்தில்   சபுகஸ்கந்த  பட்டலந்தவில் 60 ஆயிரம் பேர்வரை கொன்ற கொலைகாரருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க அப்பொழுது இருந்த அரசு முன்வரவில்லை’. ‘அவர்கள் தங்களுடைய அதிகார பலத்தை பயன்படுத்தி எங்களின் சிறு சிறு தவறுகளுக்கும் எங்களை துரத்தி துரத்தி தண்டிப்பதற்கு முனைந்தனர். மீண்டும் பிரதமராக மஹிந்த வந்து அவர்களை தண்டிப்பதற்கு முனைகின்றார்.’ ‘எங்களுடையவர்களை கூடுகளுக்கு போடும் இலஞ்ச ஊழல் பிரிவில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கல்லெறிந்து கொல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்போம்’ என பிரதியமைச்சர் உபுல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இருந்துள்ளார். இதுதொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம். அவருடை பயங்கரமான உரைக்காக தண்டனை கோவைச்சட்டத்தின் 486 உறுப்புரைக்கு அமைய 7 வருடங்கள் சிறைத்தண்டனையை அவருக்கு விதிக்கமுடியும். அதற்கு மேலாக அரச ஊழியர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட கருத்துக்காகவும் அவருக்கு ஆகக்கூடுதலான தண்டனையை வழங்கமுடியும்.