அரசாங்கம் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் பல்வேறு தரப்பினரும் விஷேட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மாலையாகும் போது, நேரடியாகவும் இணைய வழி ஊடாகவும் சுமார் 15 க்கும் மேற்பட்ட மனுக்கள் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக உயர் நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன.
அதன்படி இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட் கிழமை பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதற்காக பிரதம நீதியரசரின் கீழ் ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாமும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரே குறித்த நீதியர்சர்கள் குழாமில் அங்கம் வகிக்கும் நீதியரசர்களாவர்.
இன்றைய தினம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, செயலர் பாலித்த ரங்கே பண்டார சார்பில் விஷேட மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதனைவிட மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் சார்பிலும், மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் பொறியியலாளர் கபில ரேனுக பெரேரா, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே உள்ளிட்டவர்கள் சார்பில் நேரடியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசாங்கத்தின் பிரபல ஆதரவாளராகவும் நடப்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்குவகித்தவராகவும் கருதப்படும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தட்டுவே ஆனந்த தேரும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுவொன்றினை தாக்கல் செய்தார்.
இம்மனுவினை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸா ராஜபக்ஷவின் தரப்பினர் தாக்கல் செய்தமை விஷேட அம்சமாகும்.
இவ்வாறான நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் விஷேட ஆய்வுகளின் பின்னர் விஷேட மனுவினை நேற்று மாலை தாக்கல் செய்தது.
குறித்த சட்ட மூலம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட்டின் கீழ் எண்மர் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழாம் பகுப்பாய்வு செய்த பின்னர் வழங்கிய இடைக்கால அறிக்கையை மையப்படுத்தி இந்த விஷேட மனு இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அரசியலமைப்பின் 120 ஆவது உறுப்புரை பிரகாரம் அரசியலமைப்பு சார் நியாயாதிக்கத்தை உறுதி செய்யும் விதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த மனுக்களில், சட்ட மா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பின் முதலாம் அத்தியாயமான ‘ மக்களும், அரசும் , இறைமையும்’ எனும் தலைப்பின் கீழ் உள்ள 3 ஆம், 4 ஆம் உறுப்புரைகளான மக்களின் இறையாண்மை மற்றும் இறையாண்மையை பிரயோகித்தல் ஆகிய இரு விடயங்களையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்கள் ஊடாக உயர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
அதனைவிட, அரசியலமைப்பின் அத்தியாயம் 3 இல், அடிப்படை உரிமைகள் எனும் தலைப்பின் கீழ் வரும் 12 ஆம் 14 ஆம் உறுப்புரைகளான சமத்துவம் மற்றும் பேச்சு, தடையின்றி நடமாடுவதற்கான உரிமை, ஒன்று கூடுவதற்கான உரிமை உள்ளிட்டவற்றையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனைவிட, சில மனுதாரர்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தனி நாடொன்றினை பிரதிபலிக்கும் காரனிகளைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். துறைமுக நகரம், நாட்டின் நிர்வாக நிதி கட்டமைப்புக்கு உட்பட்ட 14 இற்கும் அதிகமான சட்டங்களிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமையை அம் மனுதாரர்கள் அதில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் உத்தேச கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் 6(1) ஆம் அத்தியாயத்தின் கீழ் துறைமுக நகரத்தில் இடம்பெறும் அனைத்து முதலீடுகளும், வணிக நடவடிக்கைகளும் ‘ பொருளாதார ஆணைக் குழுவின் ‘ கீழேயே இடம்பெறும் என்பதும், அங்கு சேவையாற்றுவோருக்கான வீசா குறித்தும் அந்த ஆணைக் குழுவே தீர்மானிக்கும் எனும் விடயமும் தேசிய பாதுகாப்பு குறித்தும் பாரிய சவால்களை உருவாக்கும் என சில மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, குறித்த பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், பாராளுமன்ற மூன்றிலிரண்டு பெரும்பாண்மைக்கு மேலதிகமாக பொது ஜன வாக்கெடுப்பும் நடாத்தப்படல் வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளனர்.