பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டி விபத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்கனவே இடுப்பு எலும்பு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு அண்மையில் தொடை எலும்பு முனையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தையடுத்து சுவிட்ஸர்லாந்தில் ஜெனிவா நகருக்கு அண்மையிலுள்ள ஹக் மருத்துவமனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்ட ஜோன் கெரி (71 வயது) அன்றைய தினமே அமெரிக்கா திரும்ப ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தார்.
எனினும் பின்னர் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை இரவை ஹக் மருத்துவமனையில் தொடர்ந்து கழித்தார்.அவர் ஸ்திரமாகவுள்ளதாகவும் அவர் எந்தவொரு கட்டத்திலும் மயக்க நிலையை அடையவில்லை எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜோன் கிர்பி கூறினார்.
அவர் தனது கால் எலும்பு முறிவிலிருந்து குணமடைந்து விரைவில் முழுமையான ஆரோக்கிய நிலையை அடைவார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.ஜோன் கெரி அமெரிக்கா திரும்பி தான் ஏற்கனவே இடுப்பு எலும்பு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட போஸ்டன் நகரிலுள்ள மஸாசுஸெட்ஸ் பொது மருத்துவமனையில் சிகிச்சையைத் தொடர எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.
ஜோன் கெரி ஸ்திரமான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு ஏற்பட்ட காயம் உயிராபத்தானது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் ஈரானிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முகமாக ஜோன் கெரி ஜெனிவாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அவர் பிரான்ஸுக்கு மிகவும் அண்மையிலுள்ள மேற்படி நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் சியொன்ஸியர் எனும் இடத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணத்தை மேற்கொண்டிருக்கையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது அவருக்கு சம்பவ இடத்தில் வைத்து ஆரம்ப கட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஜோன் கெரி மருத்துவமனையிலிருந்தவாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளடங்கலானோருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
தன்னால் ஏற்கனவே திட்டமிட்டவாறு ஸ்பெயினுக்கான விஜயத்தை மேற்கொள்ள முடியவில்லை என்பது தொடர்பிலும் இன்று செவ்வாய்க்கிழமை பாரிஸ் நகரில் இடம்பெறும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முறியடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியவில்லை என்பது குறித்தும் அவர் கவலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துவிச்சக்கர வண்டியை செலுத்துவதில் ஆர்வமுள்ளவரான ஜோன் கெரி, இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் ஈரானிய இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போதும் தனது துவிச்சக்கர வண்டியை அந்தப் பிராந்தியத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.
1992 ஆம் ஆண்டில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டி விபத்தில் அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டிருந்தது.