அடக்கம் செய்வதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யுங்கள்-அலி சப்ரி

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

 

 

முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்கு தள்ளப்படுவார்கள் என தன்னால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் எழுந்திருக்கும் விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீத்துக்கொள்ள முடியாமல் போவதையே அடிப்படைவாதிகள் எதிர்பார்க்கின்றனர். எந்தவொரு சமூகத்துக்கும் எதிராக அநீதி ஏற்படும்போது அதனை அடிப்படைவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற கருத்திலே கொராேனாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி இருந்தும் எமது நாட்டில் அது மறுகக்கப்படும்போது அதனால் பாதிக்கப்படுபவர்கள் அடிப்படைவாதிகளின் கைகளுக்குள் இலகுவில் சிக்கிக்கொள்வார்கள் என தெரிவித்திருந்தேன். அதனை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி தெரிவித்திருக்கின்றன.

அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கி இருக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனமும் அதனை அனுமதித்திருக்கின்றது. அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை. 

அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் நானும் அவர்களின் நிலைப்பாட்டிலேயே இருப்பேன். ஆனால் தகனம் செய்ய வேண்டும் என தெரிவிப்பவர்கள் விஞ்ஞான அடிப்படையில் எந்த விடயத்தையும் உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் அடக்கம் செய்வதால் வைரஸ் நீரில் கலந்து பரவுவதற்கு விஞ்ஞான ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை. அது ஒருபோதும் அவ்வாறு ஏற்படாது என வைரஸ் தொடர்பாக விசேட நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதேபோன்று உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. 

அவ்வாறான நிலையில் இலங்கை மாத்திரமே அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருக்கின்றது. அதனால்தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட  தொழிநுட்ப குழு இதுதொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்த்து நியாயமான தீர்மானம் ஒன்றை தெரிவிக்கவேண்டும் என நாங்கள் கோரி இருக்கின்றோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக நாங்கள் யாரையும் பலவந்தப்படுத்தவில்லை. அத்துடன் அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்றிருந்தால், இன்று இலகையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அந்த தொற்றாளர்களின் உமில் நீர், சிறுநீர் மற்றும் இதர தேவைக்களுக்காக பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மண்ணுடன் கலந்து விடுகின்றன. இவர்களின் கூற்றுப்படி வைத்தியசாலையை சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்படவேண்டும்.

எனவே நாங்கள் உலகில் இல்லாத ஒன்றை கேட்கவில்லை. தகனம் செய்வதற்கு பதிலாக அடக்கம் செய்யவே அனுமதி கேட்கின்றோம். அதற்கு உலக சுகாதார ஸ்தாபனமும் அனுமது வழங்கியிருப்பதாலே கேட்கின்றோம். அத்துடன் தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்து தீர்மானம் எடுத்தவர்களுக்கு அதனை கைவிடமுடியாத நிலையிலேயே அதில் பிடிவாதமாக இருக்கின்றனர் என்றார்.