எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நாங் கள் வேட்பாளராக களமிறக்கியே தீருவோம். அதற்கான இணக்கப்பாடு தற்போது பெறப்பட்டுள்ளது. பிரதமர் வேட்பாளராக அன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ
போட்டியிடுவார் என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாவிடின் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைத் தோற்கடித்து எமது அரசாங்கத்தை உருவாக்கி 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும்
டிலான் பெரெரா குறிப்பிட்டார்.
இல்லாவிடின் உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும் என்றும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சுதந்திரக் கட்சியின் ஊடாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தரப்பினர் மூன்றாவது அணியாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பாளராக களமிறக்குவோம். அதற்கான பாரிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம். பாராளுமன்றத் தேர்தலில் யாரை கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறக்குவது என்பது குறித்த முடிவை கட்சியின் மத்திய குழுவே எடுக்கும். அந்தத் தீர்மானத்தை எடுக்க தனி நபரினால் முடியாது.
எனவே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதியளிக்கும்.மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாகவே போட்டியிடும். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றுவோம். மக்கள் ஆதரவு இல்லாத பிரதமரை வீட்டுக்கு அனுப்புவோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் பதவி வகிப்பதையே நாட்டின் மக்கள் விரும்புகின்றனர். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.
பிரதமர் வேட்பாளராக அன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார். பிரதமர் வேட்பாளர் விடயத்தில் எனக்கு எதுவும் தெரியாது. ஒருவேளை நாங்கள் பிரதமர் வேட்பாளராக யாரையும் களமிறக்காமல் போட்டியிடும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன. இதற்கு முன்னரும் இவ்வாறு செய்திருக்கின்றோம்.
அதாவது சுதந்திரக் கட்சியில் எவ்விதமான பிரிவுகளும் இடம்பெற விடமாட்டோம்.
மஹிந்த – மைத்திரி தரப்பை ஒன்றிணைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறக்குவோம்.இந்நிலையில் தற்போது நாம் மூன்று தெரிவுகளை அரசாங்கத்துக்கு முன்வைக்கின்றோம். முதலாவது விடயமாக தேர்தல் முறையை மாற்றுவதற்கான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருகின்றோம். அவ்வாறு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் நாங்கள் அதற்கு முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருக்கின்றோம். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும்.
இந்நிலையில் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இரண்டாவது தெரிவாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அரசாங்கத்தை தோற்கடிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவ்வாறு அரசாங்கத்தை தோற்கடித்து எமது அரசாங்கத்தை அமைத்தால் அந்த அரசாங்கத்தில் நாங்கள் தேர்தல் முறை மாற்றத்தை நிறைவேற்றுவோம்.
இந்த இரண்டு தெரிவுகளையும் தாண்டி மற்றுமொரு தெரிவும் எங்களிடம் உள்ளது. அதாவது உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அதனை செய்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.