மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மூன்றாவது அணிக்கு எதிரான சூட்சும திட்டத்தின் விளைவாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பலர் ஐ.தே.க வில் இணையவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
மூன்றாம் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வைத்தியம் தயாராக இருக்கிறது. இதனூடாக அடுத்த தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவின் அணிக்கு பலத்த தோல்வியை நாம் பெற்றுக் கொடுப்போம். எனவும் அவர் தெரிவித்தார். ஐ.ம.சு.மு.வினர் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவிருப்பதாக கிடைத்த தகவல் தொடர்பில் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான குழுவினர் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றனர். இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் சாத்தியமாகாது.
இதற்கான சூட்சும திட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் பலர் எமது கட்சியில் இணைய தயாராக உள்ளனர். அதற்கு கட்சியினர் அனைவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மாத்திரம் இணைப்பதற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதன்பிரகாரம் மூன்றாம் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வைத்தியம் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.