காணி பிரச்சினைகளுக்கான தீர்மானம் விரைவில் வழங்கப்படும் எனவும் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் உறுதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலை  தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படும். அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களை எதிர்தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பது கவலைக்குரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

 

 

குருநாகலை மாவட்டத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில், எமது அரசாங்கம் ஆட்சியமைத்த ஒவ்வொரு காலத்திலும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்காக  இடைநிறுத்தம் செய்யப்பட்டன. இதன்  தாக்கத்தை நாட்டு மக்கள் எதிர்க் கொண்டார்கள்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை தம்புள்ளை வரை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்படும்.

காணி பிரச்சினை குறித்து ஆராய் காணி விவகார அமைச்சு சிறந்த திட்டங்களை வகுத்துள்ளது. காணி பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை   விமர்சிப்பது எதிர்தரப்பினரது செயற்பாடாக உள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த  திட்டங்களை எதிர்தரப்பினர் விமர்சிப்பது கவலைக்குரியது.

அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சிறந்த  முறையில் முன்னெடுக்கும். சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டம்  இன்னும் 2 வருட காலத்துக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.