சிரிய அலெப்போ மாகாணத்தில் அரசாங்க உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி அந்நாட்டுப் படையினர் சனிக்கிழமை நடத்திய பீப்பா குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அல் – பாப் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரிய அரசாங்கமானது பீப்பா குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்களுக்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் மேற்படி தாக்குதல்களில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளின் கீழிருந்து சிறுமியொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இது அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் – அஸாத்தின் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக விளங்குகிறது.
இதன் போது சனசந்தடி மிக்க சந்தையொன்று உட்பட பல பிரதேசங்கள் குண் டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஷார் பிராந்தியத்தில் இடம்பெற்ற பீப்பா குண்டுத் தாக்குதலில் பலியான நான்கு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்குகின்றனர்.
இந்த பீப்பா குண்டுத் தாக்குதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரிய விமானப் படை யினர் இவ்வாறு தமது பிரஜைகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளமை முழு மையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன் றென அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.