2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பல்வேறு யோசனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது.
அதற்கமைய அரச ஊழியர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், இளைஞர்கள், பண்ணை விவசாயிகள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய வரவு செலவுத் திட்ட யோசனைகளில், வீட்டு வசதி மற்றும் சொத்து கடன் நிவாரணங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, அரசு வங்கிகள் மூலம் அரச ஊழியர்களுக்கு வீட்டுவசதி மற்றும் சொத்து கடன்களுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதத்தை 7 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.
தற்போது பெற்றுள்ள அல்லது பெறவுள்ள வீட்டு மற்றும் சொத்து கடனுக்காக அரச ஊழியர்களிடம் அறவிடப்படும் வட்டி வீதம், முதல் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 3 வீதமாகவும், 10 – 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 7 வீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது.
2 மில்லியன் ரூபாய் வீடு மற்றும் சொத்து கடன் பெறும் அரச ஊழியர் ஒருவருக்கு வருடாந்தம் 2500 ரூபாய் சலுகை கிடைக்கும் வகையில் வருடாந்த சேமிப்பாக 30 ஆயிரம் ரூபாய் சேமிப்பாக வழங்கப்படவுள்ளது.
இதேவேளை அரச ஊழியர்களுக்கு சூரிய சக்தி கருவிகளை நிறுவ தேவையான கடன் வசதி 4 வீத வட்டி விதத்தில் வழங்கப்படும்.
மேலும் கொரேனா தொற்றுநோயால் நோய்வாய்ப்பட்ட அரசு ஊழியர்களின் செலவுகளை மேலாண்மை காப்பீட்டு நிதி மூலம் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிதியினால் ஏற்கப்படும் செலவுகள் மீள அறவிடாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்துடன் கொரோனா தொற்றினால் அரச ஊழியர் உயிரிழந்தால் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான காப்பீடு ஒன்றை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், ஒரு அரச ஊழியர் நோய்வாய்ப்பட்டு, கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு நாளைக்கு 3,000 ரூபாய் என்ற காப்பீட்டு இழப்பீடு 10 நாட்களுக்கு வழங்கப்படும்.