அஸ்லம் எஸ்.மௌலானா
கொரோனா தொற்று அபாய சூழ்நிலையில் கல்முனை மாநகர சபைக்கான வருமானம் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கின்ற போதிலும் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கான சேவைகளில் எவ்வித பின்னடைவும் ஏற்படவில்லை என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவிக்கையில்;
“கல்முனை மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கையை இந்த உயரிய சபையில் சமர்ப்பிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இது, நான் முதல்வராக பணியாற்றும் கல்முனை மாநகராட்சி நிர்வாகத்தின் 03ஆவது வரவு- செலவுத் திட்டமாகும். எமது சபையின் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களினதும் கருத்துக்களை உள்வாங்கி இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மக்களினதும் நலன்களையும் மாநகர அபிவிருத்தி இலக்குகளையும் கருத்தில் கொண்டு, ஒரு தூரநோக்கு சிந்தனையில் எம்மால் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
உலகை ஆட்டிப்படைக்கின்ற கொடிய நோயான கொரோனா தொற்று அபாய சூழ்நிலை காரணமாக எமது சபை வருமானம் பாரிய வீழ்ச்சி கண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் எமது சேவைகள் அனைத்தும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திண்மக்கழிவகற்றல் சேவை மிகவும் சிறப்பாக முன்னெடுக்க முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சபை வருமானத்தில் பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது. ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வாகனப் பற்றாக்குறை 80 வீதமளவில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன.
வீதி வடிகான் பராமரிப்பு சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வெள்ள அனர்த்தம் மற்றும் டெங்கு தாக்கம் என்பன வெகுவாகக் குறைந்துள்ளன. கடந்த காலங்களில் ஜனாதிபதி செயலகத்தின் டெங்கு அபாய வலய பட்டியலில் இருந்து வந்த எமது கல்முனைப் பிரதேசம் தற்போது அதிலிருந்து நீங்கி டெங்கு அபாயமற்ற பகுதியாக மாறியுள்ளது. வீதி வடிகான்கள மற்றும் சுற்றுச்சூழலை பேணுவதில் அதிக கரிசனையுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டதே இதற்குக் காரணமாகும்.
அவ்வாறே தெரு மின்விளக்கு இல்லாத வீதிகள் இல்லை என்றளவுக்கு அனைத்து வீதிகளும் தற்போது வெளிச்சமாக காட்சியளிக்கின்றன. இனிவரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் கோப்ரா தரத்திலான தெருவிளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தெரு மின்விளக்கு பராமரிப்புக்கான நவீன உபகரணத் தொகுதிகளும் கொள்வனவு செய்யப்படும்.
அத்துடன் மாநகர சபையின் நிர்வாகக் கட்டமைப்பு வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. சபையின் வரவு செலவுகள் அனைத்தும் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலங்களில் இன்னும் பல முன்னேற்றமகரமான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
குறிப்பாக அதிகரித்த மின்சார செலவைக் கட்டுப்படுத்துவதற்காக சூரிய சக்தி மின்சாரத் திட்டத்தை (Solar Power) அறிமுகப்படுத்தவுள்ளோம். வாகன பராமரிக்கும் அதிக செலவு ஏற்படுவதனால் மாநகர சபைக்கான வாகன திருத்த நிலையம் மற்றும் Service Centre ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் Welder Shop ஒன்றை நிறுவி, எமது மாநகர சபைக்கான வேலைப்பணிகளை முன்னெடுப்பதுடன் ஏனைய அரச, தனியார் நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்குவதன் ஊடாக வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கின்றோம்.
அவ்வாறே மாநகர சபை வாகனங்களுக்கான எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சபைக்கென எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எமது மாநகர சபையின் Compose Yard ஐ மேம்படுத்தி, பசளை உற்பத்திகளை அதிகரித்து, அவற்றை சந்தைப்படுத்துவதன் ஊடாக வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் மீன்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கான பிரத்தியேக மீன் சந்தையொன்றை கல்முனைக்குடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்முனை நகரில் வாகனத் தரிப்பிடமொன்று இல்லாதிருக்கின்ற நீண்டகால குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அதனை விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதன் மூலம் எமது மாநகர சபைக்கு நிலையான வருமானம் ஒன்றை ஈட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் கல்முனை மாநகர பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கும் வசதிகளை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எமது பிரதேசத்திலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமான நூல்களையும் அறிவுசார் தேவைகளையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பொது நூலகங்களில் E-Library சேவை ஆரம்பிக்கப்படும்.
சாய்ந்தமருது, கல்முனைக்குடி மற்றும் மருதமுனை ஆகிய இடங்களில் நவீன பொறிமுறையுடன் விலங்கறுமனைகள் (Slaughter house) அமைக்கப்படும்.
மாநகர சபை சொத்துக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, சபையின் அனைத்து பிரிவுகளிலும் CCTV கமரா வசதிகள் ஏற்படுத்தப்படும். அத்துடன் சொத்துப் பராமரிப்புக்காக துறைசார் வல்லுனர்களின் சேவைகள் பெற்றுக்கொள்ளப்படும்.
மருதமுனை பொது நூலக வளாகத்தில் அமைக்கப்படுகின்ற கட்டிடத்தொகுதியானது திருமண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கான விழா மண்டபமாக பயன்படுத்தப்படும்.
மருதமுனை மக்கள் மண்டபம், கைத்தறி உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான மத்திய நிலையமாக பயன்படுத்தப்படும்.
மாநகர சபையின் பிரதான அலுவலகம் தற்போது அமைந்துள்ள கல்முனை நூலக வளாகத்திற்கு சுற்றுமதிலுடன் அழகிய Gate Way அமைக்கப்படும்.
விளையாட்டு மைதானங்களின் வசதிகளை அதிகரிப்பதற்கும், பஸ் தரிப்பு நிலையம், பொதுச் சந்தை மற்றும் கடற்கரை பூங்காக்களிலும் சிறுவர் பூங்காக்களிலும் நவீன வசதிகளுடன் மலசலகூடத் தொகுதிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகர சபைக்குட்பட்ட அனைத்து கடற்கரை பூங்காக்கள் மற்றும் சிறுவர் பூங்காக்களும் புனரமைப்பு செய்யப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மாநகர சபைக்குரிய வீதிகள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புகளுக்கும் வடிகான் தொகுதிகள் புனரமைப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு வருமான மூலங்கள் ஊடான முன்மொழிவுகள் அடங்கிய இந்த வரவு செலவுத் திட்டத்தில் மீண்டுவரும் செலவுகள் உட்பட மொத்த வருமானமாக 516,199,000 ரூபா எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படுகின்ற வருமானங்கள் அனைத்தும் எமது மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கும் மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படும் என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்காலத்தில் மாநகர சபையின் அனைத்துப் பணிகளையும் இன்னும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதை இலக்காக கொண்டே எமது மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை வெற்றி கொள்வதற்கு எமது மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் என்னுடன் கைகோர்த்து, மேலும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என்று இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்துடன் இந்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக நாம் எதிர்பார்க்கின்ற வருமானங்களை திரட்டுவதற்கு வரியிருப்பாளர்களான பொது மக்களும் வர்த்தகர்களும் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன். கடந்த காலங்களில் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு மாநகர சபையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், எமது மாநகர சபையின் சேவைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உட்பட கௌரவ உறுப்பினர்களுக்கும் மாநகர சபையின் நிர்வாக மற்றும் செயற்பாடுகளுக்கு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்ற மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமார், பொது வசதிகள் பிரிவு பொறுப்பதிகாரி எம்.அமீர், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இந்த வரவு- செலவுத் திட்டத்தை குறுகிய காலத்தினுள் சிறப்பாக தயாரிப்பதற்கு உதவிய கணக்காளர் மற்றும் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தனது பட்ஜெட் உரையில் மேலும் குறிப்பிட்டார்.