நல்லாட்சியில் ’வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவதை’ அனுமதிக்க கூடாது – மசூர் மௌலானா !

எம்.வை.அமீர் 

நாட்டில் என்ன நடக்கிறதென புரிய முடியாமல் இருக்கிறது. ஒரு பக்கம் நல்லாட்சி எனும் கோஷம் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மறுபக்கம் நல்லாட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் மறைந்து நாட்டில் மறுபடியும் இனவாதம் பேசப்படுகிறது என்று இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

moulana(1)_Fotor

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா, நாட்டில் முன்னெடுக்கப்படும் சில அசாதாரண நடவடிக்கைகளின் பின்னால் திட்டமிட்ட சக்திகள் இருக்க வேண்டும் என்று அரசு யூகித்தால் அவர்களின் முன் நகர்வை தடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த அரசும் இரட்டை வேடம் போடுகிறது என மக்கள் அதிருப்தி கொள்ளும் காலம் வெகு தூரமில்லை என்று தெரிவித்தார்.

வில்பத்து விவகாரத்தில் முஸ்லிம்கள் பக்கத்தில் ஆதாரபூர்வமான நியாயங்களிருந்தும் இந்த அரசாங்கம் அவற்றை கணக்கிலெடுத்தாய் தெரியவில்லை. மேலும், தற்போது பொரள்ளை பள்ளிவாசல் இனவாதக் காடையர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கபடவில்லை.

அது போல பேருவளையில் இரண்டும் உயிர்களை கொலை செய்தும், பலரை படுகாயப்படுத்தியும், பல கோடிப் பெறுமதியான சொத்துக்களை அழித்து முஸ்லிம்களை உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இனவாதிகள் தற்போதும் நலலாட்சியில் சுதந்திரமாய் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

நல்லாட்சியிலும் இனவாதம் தாராளமாக பேசப்படுகிறது. கைது செய்யப்பட்ட நாளே பிணையில் வரும் அளவுக்கு பொது பல சேனாவின் ஞானசார தேரருக்கு சட்டம் கருணை காட்டுகிறது. இதுவெல்லாம் உற்று நோக்குகின்ற போது நல்லாட்சி மீதான சந்தேகம் பொது மக்களுக்கு வலுப்பதை தவிர்க்க முடியாது.

எனவே, உடனடியாக இவ்வாறான சந்தேகங்கள் களையப்படவேண்டும். நாட்டில் மறுபடியும் இனவாத கோடாரிக்காம்புகளும், புல்லுருவிகளும் புத்துயிர் பெற இந்த அரசாங்கம் துணை போகக் கூடாது.

எதிர்வரும் ரமழானில் எமது முஸ்லிம்கள் அச்சமின்றியும் சுதந்திரமான முறையிலும் தமது மார்க்க கடமைகளை முன்னெடுக்க இவ்வரசு வழி சமித்துக் கொடுக்க வேண்டும். அதற்கான சமிக்ஞையாக பொரளை பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்திய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி அவர்களையும் நல்லாட்சியின் ஏனைய பங்காளிகளையும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.