ரிஷாத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை- சி.ஐ.டி. பணிப்பாளர்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யும் போது, அவருக்கு விசாரணை அதிகாரிகளால் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்யவே சி.ஐ.டி.யினர் நீதிமன்ற வளாகத்தில் நீதிவானின் உத்தியோகபூர்வ அறைக்கு அருகாமை வரை வாகனத்தில் அவரை அழைத்து வந்துள்ளதாகவும் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஷாந்த டி சொய்ஸா தெரிவித்தார்.

 

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று அவர் மன்றில் ஆஜராகி, விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து மன்றில் ஆஜர் செய்யும் போது, அவருக்கு சிறப்பு சலுகை அளித்தமை தொடர்பில் எந்த விசாரணைகளையும் இதுவரை முன்னெடுக்காமை தொடர்பில் விளக்கம் கோரவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.

 

கடந்த தவணையில் ரிஷாத் பதியுதீன் விவகாரம் விசாரணைக்கு வந்த போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ்,
‘ இந்த விவகாரத்தில் முதல் சந்தேக நபர் மன்றில் ஆஜர் செய்யப்படும் போது, அவரை மறைத்துக்கொண்டு விஷேட சலுகை அடிப்படையில், நீதிவானின் வாகனம் நிறுத்தப்படும் இடத்துக்கே வாகனத்தில் அழைத்து வரப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

 

இது தொடர்பில் அன்றைய தினம் மன்றில் சுட்டிக்காட்டிய பின்னர், அந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரிக்க சி.ஐ.டி. பணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அவ்வாறு ஒரு உத்தரவே கிடைக்காததைப் போல சி.ஐ.டி. தற்போது செயற்படுகின்றது.
எனவே அது தொடர்பில் அடுத்த வழக்குத் தவணையில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.’ என கோரினார்.

 

இதனை ஆராய்ந்த நீதிவான், நேற்று 25 ஆம் திகதி சி.ஐ.டி. பணிப்பாளர் நேரடியாக மன்றில் ஆஜராகி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஆஜரான சி.ஐ.டி. பணிப்பாளர்,
‘ இது குறித்து விசாரணை நடாத்தப்பட்டது. சி.ஐ.டி. பொறுப்பதிகாரி, விசாரணை அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டன. ஊடக நிறுவன காட்சிகளும் ஆராயப்பட்டன. இதன்போது, சி.ஐ.டி.யினர் முதலாவது சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதிச் செய்யவே இவ்வாரு நடந்துகொண்டுள்ளதாக தெரியவந்தது.’ என அறிவித்தார். அது குறித்த விசாரணை அறிக்கையை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.