அரசின் காணி வழங்கும் திட்டத்தின் உள்நோக்கமும், அதனை கண்டுகொள்ளாத முஸ்லிம் தலைவர்களும், எம்பிக்களும்.
நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் அரச காணிகளை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்து வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தது.
வெளிப்பார்வையில் விவசாய உற்பத்திகளை ஊக்குவித்தல் என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியலும், தந்திரோபாயங்களும் உள்ளது. அரச காணிகள் என்னும்போது வனப்பகுதியையும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இங்கேதான் சந்தேகங்கள் வலுவடைகின்றது.
அதாவது இந்த திட்டத்தின்கீழ் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வடகிழக்கு பகுதிகளில் அரச நிலங்களை வழங்கி அவர்களை அங்கு குடியமர்த்தும் தூர நோக்கு அடிப்படையில் இந்த திட்டம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்துவாழ்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி அங்கு தமிழ்பேசும் மக்கள் செறிவினை குறைக்கவேண்டும் என்பது பிரதமர் டி.எஸ். சேனநாயக்கா அவர்களினால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
வர்த்தமானி வெளிவந்ததும் வடகிழக்கில் உள்ள அரச காணிகளை இலக்குவைத்து பெரும்பான்மையினர் ஆர்வம் கான்பிப்பதனையும், சிங்கள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதற்கு பின்புலத்திலிருந்து ஆலோசனை வழங்குவதனையும் அறியக்கூடியதாக உள்ளது.
அரசாங்கத்தின் திட்டங்களை புரிந்துகொண்ட தமிழ் தலைவர்கள், தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசமான வடகிழக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுத்து அதனை பாதுகாக்கும் நோக்கில் தமிழ் அரசியல் தலைவர்களும், பிரதிநிதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றார்கள்.
அதாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதுடன், அரச அதிகாரிகள் மூலமாக அரச காணிகளை இனம்கண்டு அந்த காணிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்களை விண்ணப்பிக்குமாறு அழுத்தம் வழங்கி வருகின்றார்கள்.
ஆனால் வடகிழக்கில் இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அரச காணிகளை அடையாளம் காண்பிக்கும் வகையில் யாருமில்லாத அநாதையாக உள்ளார்கள்.
தேர்தல் காலங்களில் மேடைகளில் வீர வசனங்களை பேசி மக்களை சூடாக்கி அவர்களது வாக்குகளை கொள்ளையடித்து பின்பு பதவிகளில் அலங்கரிக்க தெரிந்த அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.
அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு பதவிகளையும், அரசியல் அதிகாரங்களையும் பெற்றுக்கொண்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து அதனால் குடும்ப சுகபோகம் அனுபவிக்கலாம் என்ற சிந்தனையை தவிர வேறு எந்த திட்டங்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இல்லை.
எனவே அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்ட காணி வழங்குதல் திட்டத்தில், முஸ்லிம் மக்களும் பயனடையும் விதமாக முஸ்லிம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தாமலும், அதிகாரிகள் மூலமாக அரச காணிகளை இனம்காட்டாமலும் இருந்தமையானது மாபெரும் துரோகமாகும்.
எதிர்காலங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் நிகழ்ந்து, எமது நிலம் கபளீகரம் செய்யப்பட்டால் எமது அரசியல்வாதிகளே அதற்கான முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது