அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோபைடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார்.
தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரங்களை ஜோபைடன் நிர்வாகத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்காக ஜோபைடன் நிர்வாக மாற்றத்துக்கான குழுவை அமைத்துள்ளார். ஆனால் இந்த குழுவுக்கு டிரம்பால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்து வருகிறார்கள். தேர்தலில் ஜோபைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று கூறி நிர்வாகத்தை ஒப்படைக்க மறுக்கிறார்கள்.
ஆனாலும் ஜோபைடனின் நிர்வாக மாற்றத்துக்கான குழுவினர் தங்களது பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜோபைடனின் நிர்வாக மாற்ற குழுவின் ஆலோசகர் ஜென்சாக்கி கூறியதாவது:-
கடந்த 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ‘2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நிர்வாக மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயங்கரவாத தாக்குதல் குறித்து புதிய அரசு சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதும் அதுபோன்ற நிலைமை நிலவுகிறது. நம் நாடு தற்போது சந்தித்து வரும் அச்சுறுத்தல், உலகம் முழுவதும் உள்ள விமான நடவடிக்கைகள் உளவுத்துறை அறிக்கை உள்ளிட்டவற்றை பார்வையிட புதிய அதிபர் குழுவுக்கு டிரம்ப் நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது.
இந்த தகவலை நாங்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் ஆட்சிக்கு தயாராக முடியும். மக்களை ஒருங்கிணைத்து கொரோனாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நிர்வாக மாற்றத்தில் ஒத்துழைப்பு குறைபாடு இருப்பது அனைவரையும் கவலை அடைய செய்து விடும்.
ஏனென்றால் ராணுவத்துக்குள் அரசியல் நுழைந்து விடக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.