சமுதாயத்தை சந்தி சிரிக்கவைத்தீர்கள்.. ஜனாசா எரிகிறது!!!

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1605438496049"}


சாதித்ததென்ன? ஆனாலும் சாதித்தீர்கள்

வை எல் எஸ் ஹமீட்

கடந்த பொதுத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு ( துணைக்கட்சிகள் உட்பட) 150 ஆசனங்கள் கிடைத்தன. 20வது திருத்தத்திற்கு ஆளுக்கட்சிக்குள்ளேயே சிலர் எதிர்ப்பு. குறிப்பாக, விஜேதாச ராஜபக்கச, இவர் வாக்களிப்பிற்கு முதல்நாள்கூட, எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறியதாக ஒரு மதகுரு கூறினார். அதேபோல், விதுர விக்கரமநாயக்க, விமல், உதய ஆகியோரது கட்சிகள்.

இந்நிலையில்தான் நம்மவர்கள் உதவிக்குச் சென்றார்கள். எதிர்த்தவர்களும் தமது நிலைப்பாட்டை இறுதி நேரத்தில் மாற்றிக்கொண்டார்கள். ஏன் மாற்றினார்கள்? உண்மையான காரணம் நமக்குத் தெரியாது.

அவர்கள், ஆளுக்கொரு காரணத்தைக் கூறினாலும் பெரும்பாலும் உண்மைக்காரணம், தாம் எதிர்த்தாலும் திருத்தம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். எனவே, தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம்; என்கின்ற அச்சமாக இருந்திருக்க வாய்ப்புண்டு.

ஆகக்குறைந்தது இரண்டொரு பேராவது அந்த அச்சத்தினால் தம் நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம். எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் 20 வென்றிருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை.

குறித்த எட்டுப்பேரில் நம்மவர்கள் தவிர்ந்த ஏனைய இருவரும் வாக்களித்திருந்தாலும் பெரும்பாலும் பெரும்பான்மை கிடைத்திருக்காது, ஆளும்கட்சிக்குள் இரண்டொருபேராவது எதிர்த்திருந்தால். மட்டுமல்ல, நம்மவர் அறுவரும் திசைமாறாமல் இருந்திருந்தால் சிலவேளை அவ்விருவரும்கூட எதிர்த்து வாக்களித்திருக்கலாம், கட்சியில் இருந்து நீக்கப்படுவோம்; என்ற அச்சத்தில்.

இவர்களின் ஆதரவு அவர்களையும் தைரியப்படுத்தி இருக்கலாம். அதனால் அவர்களும் துணிச்சலாக ஆதரவாக வாக்களித்திருக்கலாம். திருத்தம் நிறைவேறுவது என்பது வெறும் எண்கணிதம் அல்ல. அங்கு அரசியல் உளவியலும் இருக்கின்றது.

ஆரம்பமுதலே, நம்மவர்கள் ஆதரிக்கப்போகின்றார்கள் என்பது பரகசியமாகிவிட்டது. இல்லையெனில் ஆளும் கட்சிக்குள் இருந்து இன்னும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கலாம். ஏனெனில், 20 இற்கெதிராக கணிசமான மதகுருக்களும் நாட்டு மக்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள்.

சுருங்கக்கூறின், நம்மவர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் பெரும்பாலும் 20, தோற்றிருக்கலாம். 20, நாட்டிற்கு நல்லதா? இல்லையா? முஸ்லிம்களுக்கு பிரத்தியேக பாதிப்பு உண்டா? இல்லையா? என்ற கேள்விகளுக்கப்பால் 20, தோற்றிருந்தால் ஆளும்கட்சிக்குள் பிளவுகள் தோன்றியிருக்கும்; ஆளும்கட்சி பலவீனமடைந்திருக்கும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் ஆட்சி முஸ்லிம்கட்சிகளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் அரவணைப்பை அதிகம் நாடியிருக்கும்.

குறிப்பாக, ஶ்ரீ சு கட்சியில் பலருக்கு அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தி இருக்கின்றது. அது அரசை இன்னும் பலயீனப்படுத்தியிருக்கும். அதனால் புதிய யாப்பு விடயத்தில், அல்லது அதற்கு முன் இந்த 20 இற்குப் பதிலாக இன்னுமொரு 20ஐக்கொண்டுவர முயற்சித்திருக்கலாம்; அதற்கு நமது ஆதரவு தேவைப்பட்டிருக்கும்.

எனவே, எவ்வகையிலேனும் முஸ்லிம்களை அரவணைக்கவேண்டிய தேவை ஆட்சியாளர்கட்கு ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சியில் இணைந்து போட்டியிட்டதால் எதிர்க்கட்சியிலேயே இருக்கவேண்டுமென்பது விதியல்ல. ஆனால் எதற்காக ஆளும்கட்சிக்கு ஆதரவளித்தோம்; சாதித்ததென்ன? என்பதுதான் கேள்வியாகும்.

ஆகக்குறைந்தது, இந்த ஜனாசா எரிப்பு வர்த்தமானியைத் திருத்துங்கள், நாங்கள் உங்கள் கட்சிக்கு எதிராகப் பேசித்தான் வாக்குப்பெற்றோம். இந்த ஜனாசா எரிப்பினால் எங்கள் மக்கள் மனம் வெதும்பிப் புண்ணாகி இருக்கிறார்கள். இதையாவது நீங்கள் செய்தால் எங்கள் மக்கள் சற்று ஆறுதலடைவார்கள். அந்த மக்கள் வாக்களிக்காமல் நாங்கள் பாராளுமன்றம் வந்திருக்கவும் முடியாது, நீங்கள் எங்களை நாடும் நிலை ஏற்பட்டிருக்கவும் முடியாது. எனவே, அதனைச் செய்யுங்கள் வாக்களிக்கிறோம்என்றாவது கூறமுடிந்ததா?

எதைச் சாதித்தீர்கள்? ஆனாலும் சாதித்தீர்கள்! அந்நியவர்களால் முஸ்லிம் சமூகம் காறி உமிழப்படுமளவு சாதித்தீர்கள். ஏனைய மொழி ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில இணையத்தளங்களை வாசித்தவர்களுக்குத் தெரியும். எவ்வளவு துப்புக்கெட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் அரசியலையும் வர்ணித்தார்கள் என்று.

அவற்றை வாசிக்கும்போது கூனிக்குறுக வேண்டிய ஒரு நிலை மானமுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்பட்டது. ஏன், உங்களையே எவ்வளவு கேவலமாக ஆளும்கட்சியில் உள்ளவர்கள் எள்ளிநகையாடினார்கள்.

இவர்களின் ஆதரவு எங்களுத்தேவையில்லை; விரும்பினால் வாக்களிக்கலாம்என்றார்கள். உங்கள் சோற்றில்போட்ட உப்பு உங்களுக்கு உறைக்கவில்லை வாக்களித்தீர்கள்.

இவர்கள் வாக்களித்தாலும் அமைச்சுப்பதவி வழங்கமாட்டோம் என்றார்கள்.
அது ஒன்றுமில்லை. சும்மா கொசு கடிக்கிறது; என்று பின் கதவால் அமைச்சுப்பதவிகளுக்கு கெஞ்சிக்கொண்டு வாக்களித்தீர்கள்

உங்களைப்பற்றி என்னனென்னவெல்லாம் ஆளும்கட்சிக்காறர்கள் சொன்னார்கள். சில நேரங்களில் எங்களுக்கு காதுகேட்பதில்லை; என்பதுபோல்போய் வாக்களித்தீர்கள்.

சமுதாயத்தை சந்தி சிரிக்கவைத்தீர்கள்.

ஜனாசா எரிகிறது!!!