கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை மூன்றாம் கட்டத்திலுள்ளமை சுகாதார அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளது.
எனினும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் , ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளும் நாட்டிலுள்ள பல்வேறு துறைகள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சினால் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவித்தலில் வைரஸ் பரவலின் கட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவலில் 4 கட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அதற்கமைய,முதலாவது கட்டம் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மாத்திரம் தொற்றாளர்களாக இனங்காணப்படுவதாகும்.
இரண்டாம் கட்டம் ஒரு கொத்தணி மாத்திரம் உருவாகின்றமையாகும்.
மூன்றாம் கட்டம் வெவ்வேறு மாவட்டங்களில் கொத்தணிகள் உருவாகின்றமையாகும்.
நான்காம் கட்டமானது எவ்வித தொடர்புகளும் இன்றி வெவ்வேறு இடங்களிலும் கொத்தணிகள் உருவாகின்றமையாகும்.அதற்கமைய இலங்கை தற்போது மூன்றாம் கட்டத்திலுள்ளது என்பது சுகாதார அமைச்சினால் இனங்காணப்பட்டுள்ளது.
3 ஆம் கட்டம் உருவாகியுள்ள போதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத அனைத்து பிரதேசங்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அதற்கமைய வீடொன்றிலும் , பொது போக்குவரத்திலும், வாடகை போக்குவரத்து, வருமானமீட்டும் சேவைகள் (மின்சாரம், நீர், எரிபொருள் நிரப்புதல், எரிவாயு விற்பனை நிலைங்கள், வாகனம் பழுது பார்க்குமிடங்கள் மற்றும் தபால் சேவை என்பன) , அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட துறைகள் (ஆடை, விவசாய உற்பத்தித்துறைகள்) , பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) , கடைகள், நிதி நிறுவனங்கள் (வங்கி உள்ளிட்டவை), ஆடை விற்பனை நிலையங்கள், விவசாயத்துறை, சில்லறை விற்பனை நிலையங்கள், திறந்த சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள், பேக்கரிகள், நடைபாதை வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகள், கட்டட நிர்மாணத்துறை, முடிவெட்டும் நிலையங்கள், வன்பொருள் விற்பனை நிலையங்கள் (hardware outlets), ஆடை சலவை செய்யுமிடங்கள், ஆடை தைக்குமிடங்கள், நீதிமன்றம், சுகாதாரத்துறைகள் (அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள், பாமசி, இராசாயன பகுப்பாய்வு நிலையங்கள்) , முன்பள்ளிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், மங்கள வைபவங்கள், மரண நிகழ்வுகள் (கொவிட் மற்றும் சாதாரண மரணங்கள்) , உள்ளரங்கு நிகழ்வுகள், வெளியரங்கு நிகழ்வுகள், பொது மக்கள் கூட்டம், மத வழிபாட்டு தளங்கள், தற்காலிக தங்குமிடங்கள், திரையரங்குகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட மேலும் பல இடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.