அரசியல் யாப்பு ஓர் அறிமுகம்
——————————————
‘அரசியல் யாப்பு’ என்பது ஒரு நாட்டின் அடிப்படை சட்டமாகும். அது அரசின் தன்மை, ஆட்சிமுறை, ஆட்சியாளரைத் தெரிவுசெய்யும் முறை, அவர்களது அதிகாரம், மக்களின் உரிமைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையேயுள்ள தொடர்பு போன்ற பல விடயங்களை உள்ளடக்கியிருக்கும்.
ஒரு நாட்டின் சகல சாதாரண சட்டங்களினதும் வலுத்தன்மை அரசியல் யாப்பிலிருந்தே பெறப்படுகிறது. அரசியல் யாப்பிற்கான வலுத்தன்மை எங்கிருந்து பெறப்படுகின்றது? நாடுகளைப் பொறுத்து விடைகள் மாறுபடும்.
இது தொடர்பாக ஜேர்மனியில் உருவான Grundnorm என்ற கோட்பாட்டின்படி, ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசியல் யாப்புகள் அல்லது அவற்றிற்கான முன்னோடிகளின் ஆக முந்திய அமைப்பு அதன் அடிப்படைப் புள்ளியைக் குறிக்கும்.
அதாவது, தந்தை, பாட்டன், பூட்டன், முப்பாட்டன் என்பதுபோல் கடந்த யாப்பில் இருந்து இந்த யாப்பிற்கு அதிகாரம் வந்தது. அந்த யாப்பிற்கு அதற்கு முந்திய யாப்பில் இருந்து அதிகாரம் வந்தது; என்று வருகின்ற ஒரு இறுதிப்புள்ளிதான் Grundnorm. இது தொடர்பாக ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தனித்தனி நாடுகளாக இருந்த பல பிராந்தியங்களுக்கிடையிலான ஓர் ஒப்பந்தமே அதன் யாப்பாகும். இதனால் அரசியல் யாப்பை ‘ Compact’ என்றும் அழைப்பதுண்டு.
இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படை பிரித்தானியா நமக்கு வழங்கிய அரசியல் யாப்பு. அதுதான் நமது Grundnorm என்று ஒரு கோணத்தில் பார்க்கலாம்; ஆனாலும் 1972ம் ஆண்டு யாப்பு அந்தத் தொடரை முறித்து ( break in legal continuity) புரட்சிகர ரீதியில் பாராளுமன்றம் ஒரு புறமாக இருக்க அரசியல் நிர்ணயசபையினூடாக ( Constituent Assembly) உருக்கப்பட்டு அது காட்டிய வழியின் பிரகாரம் 1978ம் ஆண்டு யாப்பு உருவாகி, அதன்வழியில் புதிய யாப்பிற்கான முயற்சி நடைபெறுகிறது.
எனவே, நமது Grundnorm 1972ம் ஆண்டு யாப்பே! இந்த யாப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதன்மையாக, புதிய அரசியல் யாப்பை உருவாக்க மக்களிடம் அனுமதிகோரி தேர்தலில் வெற்றிபெற்றதனால் அது மக்களால் உருவாக்கப்பட்ட யாப்பாக கொள்ளப்படுகிறது.சுருங்கக்கூறின் நமது யாப்புக்கான அதிகாரம் அல்லது வலுத்தன்மை மக்களிடமிருந்து பெறப்படுகின்றது.
அதேநேரம், இந்த புதிய யாப்பு மக்களின் சர்வஜன வாக்கைடுப்பில் மக்கள் ஆணையைப்பெறவேண்டும். அவ்வாறு பெறுகின்றபோது இந்த யாப்பிற்கு Grundnorm மக்கள் அதிகாரமே தவிர வேறுதுவுமில்லை; என்றொரு வாதத்தையும் முன்வைக்க முடியும்.
அதேநேரம், இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் சமமான இறைமையுள்ள நாடாக கொள்ளப்படுகிறது. ( ஐ நா சாசனம்: சரத்து 2.1) ஒவ்வொரு நாட்டினதும் இறைமை என்பது அந்த நாட்டு மக்களது இறைமையாக ( people’s sovereignty or popular sovereignty) கருதப்படுகிறது.
இந்த அடிப்படையில் சகல நாடுகளினதும் அரசியல் யாப்புக்கான அதிகாரம் மக்களிடமிருந்தே பெறப்படுவதாக கொள்ளப்படுகிறது.
இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் எண்ணிக்கைப் பெரும்பான்மை என்பது பெரும்பான்மை வாதத்தையே வெளிப்படுத்தும் ஒரு சமூகம் பாதிக்குமேல் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்போது.
இங்கு ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு அரசியல் சமூகமாகும். ( political community) எனவே, இந்த சமூகங்கள் ஒவ்வொரு கூறாக ( entity) கருதப்பட்டு, அந்தக்கூறுகள் ஒன்றிணந்து எடுக்கின்ற முக்கிய தீர்மானங்கள்தான் இலங்கை சமூகத்தின் தீர்மானமாக கொள்ளமுடியும்.
இதன் அடிப்படையில்தான் ‘ தேசியம்’ என்ற தத்துவமும் பார்க்கப்படவேண்டும். சுருங்கக்கூறின் புதிய யாப்பு என்பது சகல சமூகங்களினதும் அங்கீகாரத்துடன் அவர்களது அடிப்படை உரிமைகள் அனைத்தும் உள்வாங்கப்பட்டதாக அமையவேண்டும்.
அரசியல் யாப்பு என்பது அவ்வப்போது மாற்றப்படுகின்ற ஒன்றல்ல, இலங்கையில் நிலைமை சற்று வேறாக இருந்தபோதிலும். உதாரணமாக, அமெரிக்க யாப்பு 1789ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அது இதுவரை 27 தடவைகள்தான் திருத்தப்பட்டிருக்கின்றது. இறுதியாக திருத்தப்பட்டது 1992ம் ஆண்டாகும்.
எனவே, ஒரு புதிய அரசியல் யாப்பு வரும்போது நாமும் நமது பிரதிநிதிகளும் கவனமாக இருக்கவேண்டும். நமது உரிமைகள் பறிபோனால் அவற்றை மீட்டெடுக்க எத்தனை தசாப்தம் செல்லுமென்று கூறமுடியாது. அந்தவகையில் இத்தொடர் ஆக்கத்தில் முடிந்தவரை சில முக்கிய விடயங்களை தெளிபடுத்த முயற்சிக்கப்படுகிறது; இன்ஷா அல்லாஹ்.
அந்தவகையில் முதலாவதாக ஒரு சில நாடுகளின் ஆட்சிமுறைகளை சுருக்கமாக பார்த்து அதன்மூலம் சில அடிப்படைத் தெளிவுகளைப் பெற்றுக்கொண்டு நமது யாப்பிற்குள் நுழைவோம், இன்ஷா அல்லாஹ்.
( தொடரும்)