கொரோனா சமூக பரவலாகிய உண்மையை மூடி மறைக்கின்றது அரசாங்கம்-எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக அரசாங்கம் கூறினாலும் வைரஸ் சமூக பரவலாகிவிட்டது.
அரசாங்கம் மட்டுமே இந்த உண்மைகளை தொடர்ந்தும் மறைத்துக்கொண்டுள்ளது என சபையில் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சுகாதார பணிப்பாளர் நியமனத்திலும் அரசாங்கம் ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, மூன்று மணிநேரம் மாத்திரம் சபை அமர்வுகள் இடம்பெற்ற வேளையில் சுகாதார அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமைகளை அறிவித்திருந்த நிலையில் எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை கூறுகையில் அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,சுகாதார பணிப்பாளர் நியமனம் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த தெரிவு தவறானதாகும். சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட தெரிவாகவே இது அமைந்துள்ளது.

 

இப்போது நியமிக்கப்பட்டுள்ள சுகாதார பணிப்பாளர் நியமன பட்டியலில் பின் வரிசையில் இருந்தவரே. இம்முறை பணிப்பாளர் தெரிவில் கண்டியை சேர்ந்த வைத்தியர் ரத்நாயகவே தெரிவாகியிருக்க வேண்டும். ஆனால் பட்டியலில் நான்காம், ஐந்தாம் தரவரிசையில் உள்ளவரை நியமித்துள்ளனர்.
எனவே இது அரசாங்கத்தின் தேவைக்காக ஊழல் செய்து இவ்வாறான தெரிவுகளை முன்னெடுத்துள்ளமை தெளிவாக வெளிப்படுகின்றது.

 

அதுமட்டுமல்ல சுகாதார அமைச்சர் சபைக்கு வந்த நேரம் தொடக்கம் கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே கூறிக்கொண்டுள்ளார். ஆனால் நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது. அரசாங்கம் மட்டுமே இன்னமும் சமூக பரவல் இல்லை என்ற பொய்யை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.