மீண்டும் தம் பலத்தை காட்டிய மும்பை-ராஜஸ்தானை அபாரமாக வென்றது
ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மாஸ் காட்டினர். சிறப்பாக ஆடிய குவிண்டன் டிகாக் 15 பந்தில் 1 சிக்சர் உள்பட 23 ரன் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் ரோகித் சர்மா 23 பந்தில் 3 சிக்சர்கள் உள்பட 35 ரன் எடுத்து ஸ்ரேயாஷ் கோபால் பந்து வீச்சில் வெளியேறினார்.
அடுத்து வந்த இஷான் கிஷன் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பின்னர் வந்த குர்னால் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்னால் பாண்ட்யா 17 பந்தில் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஹர்திக் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் ராஜஸ்தான் பந்து வீச்சை திணறிடித்தார். 19 பந்தை சந்தித்த பாண்ட்யா 30 ரன்னிலும், அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 2 சிக்சர்கள் உள்பட 79 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனால், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜேய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜேய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்னிலும், சஞ்சுவ் சாம்சங் ரன் எடுத்துவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஜோஸ் பட்டலர் அரைசதம் கடந்தார். அடுத்துவந்த லோம்மூர் 11 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தால் சற்று நம்பிக்கை அளித்த பட்லர் 44 பந்தில்
4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 70 ரன்கள் குவித்த நிலையில் பேட்டிசன் பந்துவீச்சில் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களான டாம் கரன் 15 ரன்னிலும், ராகுல் தேவாட்டியா 5 ரன்னிலும், ஆர்ச்சர் 24 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.