முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்தது-ரணில் விக்ரமசிங்க

தமிழர் தரப்புடன் இணைந்ததாக இருந்த முஸ்லிம்களை தனியான இனத்துவ அடையாளத்தைக் கொண்ட தரப்பாக பிரிக்க உளவுத் துறைக்கு பாரிய தேவை இருந்த நிலையில், வடக்கிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிகளை வெளியேற்றியதை அடுத்து, முஸ்லிம்களின் அத்தகைய கோரிக்கைக்கு எமது உளவுச் சேவையும் மறைமுகமாக உதவியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

 

புலிகளுடனான யுத்ததின் போது உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அது ஒரு உக்தியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் நேற்று இதனை வெளிப்படுத்தினார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில், அவரது கேள்விகளுக்கு பதிலளித்தவாறு ரணில் விக்ரமசிங்க சுமார் ஒரு மணி நேரம் வரை குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.

 

அதன் பின்னர் சுகயீன நிலைமை காரணமாக பிறிதொரு திகதியை சாட்சியமளிக்கக் கோரி, அவர் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது எதிர்வரும் 13 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு அவருக்கு மீள ஆணைக்குழுவில் ஆஜராக அறிவித்தல் விடுக்கப்பட்டது.நேற்றைய தினம் மேற்கண்ட விடயங்கள் குறித்து ஆணைக்குழுவில் விளக்கங்களை முன்வைத்த ரணில் விக்ரமசிங்க,முஸ்லிம்கள் தனியான இனத்துவ அடையாளதரப்பாக அரசியலில் அடையாளப்படுத்தப்பட்ட பின்னணியினை விளக்கலானார்.

 

‘தமிழீழ விடுதலை புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், முஸ்லிம்களை தனித்துவ அடையாளத்துடன் அரசியலில் அடையாளப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மேலெழுந்தது. அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபும் அந்த கொள்கையில் இருந்தார்.முஸ்லிம்களை இவ்வாறு தமிழர்கலிடம் இருந்து பிரித்து தனியாக தரப்பாக அடையாளப்படுத்த எமது உளவுச் சேவைக்கும் பாரிய தேவை இருந்தது. அது ஒரு மறைமுக தந்திரோபாய வியூகம். அவ்வாறு முஸ்லிம்கள் தனித்தரப்பாக அடையாளப் படுத்தப்பட்டதன் ஊடாக யுத்ததின் போது, உளவுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது இலகுவானது என்றார்.