அரசாங்கம் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை


கொரோனா தொற்று அறிகுறிகளுடன் காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, மினுவங்கொடை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் மறு அறிவித்தல் வரை பொதுமக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விருந்துபசாரங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மதம் சார்ந்த ஊர்வலங்கள் உட்பட அனைத்து விதமான ஊர்வலங்களுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.