ஐக்கிய தேசியக் கட்சியே எமக்கு பிரதான எதிரியாகும். ரணில் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதே எமது கட்சியின் பிரதான இலக்காகும். சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சுசில் பிரேம்ஜெயந்த தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் ஒருபோதும் மூன்றாவது கூட்டணி உருவாகாது. அவர் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார். அதேபோல் அவரை பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த தலைமையில் மூன்றாவது அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் என்று செய்திகள் வெளிவ் துள்ள நிலை யில் அது தொடர்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலமான கட்சியாகவே களமிறங்கும். கட்சியை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எம்மிடையே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிஅதன் பங்காளிக் கட்சிகளை இணைத்துக்கொண்டு முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்போதும் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியாக களமிறக்குவது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளோம். ஆகவே எந்த சந்தர்பத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இரண்டு கட்சியாக களமிறங்காது.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ தனித்து களமிறங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவர் முக்கிய உறுப்பினராக செயட்படுகின்றார். கட்சியில் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவரது ஆலோசனையையும் நாம் கேட்டே செயற்படுகின்றோம். அவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை புறக்கணித்து செயற்படுவார் என நாம் நினைக்கவில்லை.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியே எமது பிரதான எதிரியாகும். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தி எமது அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சியை பிளவுபடுத்தி எமக்குள் இரு அணியாக செயற்படுவதை நாம் விரும்பவில்லை. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவு படுத்தி மூன்றாவது கட்சியை உருவாக்க எவரேனும் திட்டம் தீட்டினால் அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
கட்சிக்குள் நல்ல ஒற்றுமை உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை காப்பாற்றி எதிர்கால அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். எவ்வாறானதொரு நிலைமையிலும் கட்சியை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம்.
மேலும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் நாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுத் தேர்தலை அறிவித்தவுடன் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படும். கட்சியின் தலைவர் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்தாலோசித்து அப்போது உள்ள நிலைமைக்கு நிலைமைக்கு அமைய சரியான தீர்மானம் எடுப்போம்.
ஆனால் மஹிந்த ராஜபக் ஷ வை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் கருத்துகள் தற்பொழுது கட்சிக்குள் ஏற்படவில்லை. ஒரு சிலர் அரசியல் நோக்கத்துக்காக தெரிவிக்கும் கருத்துக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.