பழுலுல்லாஹ் பர்ஹான்
மியன்மார் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைத் தளங்களில் பல பிழையான செய்திகளும் தொடர்பில்லாத புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இது தவறானதாகும். உண்மையில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் யார்? அவர்களின் வரலாறு என்ன? அவர்கள் தற்போது எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை யாது என்பதை மிக சரியாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களான நாம் இப்பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் முறையான கவனம் அவசியப்படுகிறது.
இப்பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுக வேண்டும்’ என்று விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ் தெரிவித்தார்.
காத்தான்குடி இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவின் ஏற்பாட்டில் கடந்த 29.05.2015 வெள்ளிக்கிழமை இரவு பிஸ்மி வளாகத்தில் இடம்பெற்ற ரோஹிங்க்யா முஸ்லிம்கள் தொடர்பான விஷேட விழிப்புணர்வு கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.நுஸ்ரி (நளீமி) தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டு கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம்.பீ.எம்.பைறூஸினால் ‘ரோஹிங்க்யா: மறக்கப்பட்ட மக்கள்’ எனும் தலைப்பில் விஷேட விரிவுரை ஒன்று நிகழ்த்தப்பட்டது.
இங்கு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களின் உண்மை நிலை குறித்தும் அவர்களுக்கு இடம்பெறும் மனித கடத்தல் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழகத்தின் உறுப்பினர்கள், கல்விமான்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், அதிகமான பெண்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.