பாராளுமன்றத்தில் குழுநிலை சந்தர்ப்பத்தின் போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், ஆளும் தரப்பினரால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியர்கள் குழாம் பரிசீலிக்கின்றது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமையாகும் போது முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 7 இடையீட்டு தரப்புகளும் முன்வந்துள்ளன.
குழுநிலை சந்தர்ப்பத்தில் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளின் வாய்மூல சமர்ப்பணங்கள் ஆரம்பமாவதற்கு முன்னதாக சட்ட மா அதிபர் மன்றில் அறிவித்தார்.
குறித்த திருத்தங்கள் அடங்கிய ஆவணத்தையும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த ஆவணத்திற்கு அமைய, ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கும் போது ஜனாதிபதி பாராளுமன்ற சபையின் கண்காணிப்புகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பதவிக்கு தகமைவாய்ந்த கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அலுவலகங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் மீண்டும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற திருத்தமும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.