எனது மதிப்பிற்குரிய
இஸ்லாமிய உறவுகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எங்களது அன்புக்கும் கௌரவத்திற்குமுரிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன், அல்ஹம்துலில்லாஹ். இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வை அதிகமதிம் துதிபாடி இஸ்திஃபார் செய்யுமாறு தருணம் இதுவென்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மனித முயற்சிகளை தாண்டிய வெற்றிகளை தருவதற்குப் போதுமானவன் அல்லாஹ் ஒருவனே! அல்ஹம்துலில்லாஹ்.
“நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கு உதவி செய்வான்.” (அல்குர்ஆன்)
“நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது எமக்கு கடமையாகிவிட்டது.” (அல்குர்ஆன்)
உஸ்தாத் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதையடுத்து ஜமாஅத்தின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மட்டுமின்றி முழு முஸ்லிம் சமூகமும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதனால்தான் அவரது விடுதலைக்காக சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம், சமூக தலைமைத்துவம் மற்றும் சமயத் தலைமைத்துவம் ஆகியன மூன்றும் சேர்ந்து ஒத்துழைத்தன. அதற்கான சாத்விகப் போராட்டத்தை முதிர்ச்சியான முறையொன்றின் மூலமாக அணுகி செயற்பட்டன என்பதை நான் இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையிலும் ஜமாஅத்தின் தலைமைத்துவம் சார்பாகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் எல்லோரும் பிராந்தியங்கள், கிளைகள், ஊர் மட்டங்களில் உஸ்தாத்தின் விடுதலைக்காக சமூகத்தோடு இணைந்து உழைத்தீர்கள். எல்லோரும் எமது மதிப்பிற்கும் நன்றிக்கும் உரியவர்கள். இது ஜமாஅத்தின் வெற்றியன்று மாறாக, சமூகத்தின் வெற்றியாகும். இது விடயத்தில் பக்கபலமாக நின்ற அனைவருக்கும் அல்லாஹ் நிறைந்த கூலியை வழங்குவானாக.
மேலும் உஸ்தாதின் விடுதலைக்கான முயற்சியின்போது விசாரணைகளை மேற்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் பலரிடம் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் உண்மையை விரும்பும் மனோபாவத்தையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே, இந்நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக விசுவாசத்துடன் கடமை புரிகின்றவர்களுக்கும் எமது நன்றிகள் என்றென்னும் உரித்தாகட்டும்.
உஸ்தாத் அவர்களைப் போன்றே பலர் தக்க காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது விடுதலைக்காகவும் புணர்வாழ்வுக்காகவும் ஜமாஅத் தொடர்ந்தும் பாடுபடும், இன்ஷா அல்லாஹ். 2019.09.25 அன்று CID மற்றும் TID உயரதிகாரிகளோடு CID தலைமையகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது ஜமாஅத் இதனை வலியுறுத்தியது. அனைத்து சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர் என்பது மிக முக்கியமானது.
இஸ்லாமியப் பணியை மேற்கொள்கின்ற நாம் தைரியமிழக்கவோ அவநம்பிக்கை கொள்ளவோ தளர்ந்துவிடவோ தேவையில்லை. இந்தப் பணிக்கு உற்சாகம், உத்வேகம், உண்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை என்பன இன்றியமையாதவை. அவை ஜமாஅத்திடம் உண்டு. காட்டிக் கொடுப்புகள் மற்றும் துரோகத்தனங்களால் ஏற்படும் விளைவுகள் சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் என்பன ஒரு முஸ்லிமிற்கு பொதுவாகவும் ஜமாஅத்தின் உறுப்பினர்களாகிய எமக்கு குறிப்பாகவும் புதிதல்ல.
எனவே சகோதர சகோதரிகளே! உஸ்தாதின் விடுதலையின் வெற்றியை சமூகத்திற்கே சமர்ப்பணம் செய்வோம். நாம் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்வோம். இஸ்திஃபார் செய்வோம். இஸ்லாமியப் பணியை கால நேர குறிப்பறிந்து செய்வோம். வெற்றியும் தோல்வியூம் அல்லாஹ்வின் புரத்திலிருந்தே தீர்மானமாகிறது என்பதை மனதிற் கொள்வோம்.
மீண்டும் சந்திக்கும் வரை
வஸ்ஸலாம்
உங்கள் உண்மை ஊழியன்
எம் எச் எம் உஸைர் இஸ்லாஹி
அமீர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
27.09.2019