சிரேஷ்ட ஊடகவியலாளர்களான சலீம் , மீரா மற்றும் காதர் ஆகியோரை கௌரவித்த அமைச்சர் ஹரீஸ்


(எஸ்.அஷ்ரப்கான்)

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருடாந்த ஒன்றுகூடல் சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (29) சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தகர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,

நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கின்ற ஆயுதமான பேனாவை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் சந்தர்ப்பத்தை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். ஊடகவியலாளர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றுகின்ற ஒரு அச்சாணியாகும். அவர்களுக்கு எப்பொழுதும் என்னுடைய கெளரவ மரியாதை இருக்கின்றது. அது என்னுடன் இரண்டறக் கலந்த விடயம். அந்த அடிப்படையில் தான் இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அமைச்சின் ஊடாக குறிப்பாக கல்முனை பிரதேசம் அதுபோன்று ஏனைய பிரதேசங்கள் மிகக் குருகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அதனை செவ்வனே செய்து முடிக்க நாம் எத்தனிக்கின்றோம். இதற்கு சகலரும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது, மூத்த ஊடகவியலாளர்களான வாழ்நாள் சாதனையாளர், ஊடக முதுசம், கலாபூசனம் ஏ.எல்.எம். சலீம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர், கலை இலக்கிய வித்தகர், கலாபூசனம் மீரா எஸ். இஸ்ஸடீன் மற்றும் கிழக்கு மாகாண வித்தகர் பி.எம்.எம்.ஏ. காதர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் பொன்னாடை போர்த்தி பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் சேவையினை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை அமைப்பாளர் ஸபீக் இஸ்மாயிலினால் நினைவுப் பா வழங்கப்பட்டது.