வை எல் எஸ் ஹமீட்
சாய்ந்தமருது மக்கள் கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தெட்டத்தெளிவாக தமது தேவை ‘ உள்ளூராட்சி சபைதான்’ என்று சொல்லி விட்டார்கள். இதில் இன்னும் பேசுவதற்கு என்ன இருக்கிறது.
இவ்வாறுதான் ஏற்கனவே 40 இற்கு மேற்பட்ட தடவைகள் பேசி அலைக்கழித்து அவர்களை விரக்தியின் விளிம்புக்குள் தள்ளி ஒரு போராட்டத்திற்கு வித்திடப்பட்டது. இப்பொழுது மீண்டும் பேசுவது எதை? உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கைவிடுங்கள் என்றா? அல்லது அடுத்த தேர்தலுக்குப்பின் செய்து தருவோம் என்றா? 40 தடவையும் பேசாததையா பேசப்போகின்றீர்கள்?
பேச்சுவார்த்தை என்ற பெயரில் இரண்டாம் பாகம் தொடங்கி மீண்டும் ஒரு அசௌகரியமான ஒரு சூழலை ஏற்படுத்த வேண்டாம். தேர்தல் நெருங்குகின்றது; என்பதற்காக மீண்டும் அரசியல் உத்திகளைக் கையாள முயற்சிக்க வேண்டாம்.
இது இரண்டு சகோதர ஊர்களின் சௌஜன்ய உறவோடு சம்பந்தப்பட்ட விடயம். யாருடைய அரசியலுக்காகவும் அதில் மீண்டும் விரிசல் ஏற்படுத்தப்பட வேண்டாம். ஏற்கனவே, இதே அரசியலுக்காகத்தான் இந்த இரண்டு ஊர்களும் பலிக்கடாவாக்கப்பட்டன; என்பதை மறந்து விடவேண்டாம்.
அன்று, ஒன்றில் அவர்களிடம் மறைந்த தலைவர் கூறியதுபோன்று நேரடியாக ‘ இது செய்வது சாத்தியமில்லை’ என்று நேர்மையாக கூறியிருக்க வேண்டும். அல்லது வாக்குக் கொடுத்தால் காதும் காதும் வைத்தாற்போல் எப்போதோ நான்காகப் பிரித்திருக்க வேண்டும்.
ஆலையடிவேம்பு, காரைதீவை எல்லாம் நம்மிடம் கேட்டா பிரித்தார்கள். சாய்ந்தமருதுக்கு தனியாக கொடுக்கவும் முடியாது. நான்காகப் பிரிக்க திராணியும் இல்லையென்றால் எதற்காக 40 தடவைக்கு மேல் அழைத்துப்பேசி ஏமாற்றவேண்டும்? அதன்விளைவை அனுபவித்தது போதாதா? மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை: பாகம் இரண்டா? எதற்காகப் பேச்சுவார்த்தை? இப்பொழுது தேவை செயலே! எனவே இனியும் தாமதியாது செயலில் இறங்குங்கள்.
செய்யவேண்டியதென்ன?
———————————
இப்பொழுது என்றுமில்லாதவாறு த தே கூ அமைப்பிற்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் ஒரு நெருக்கமான உறவு இருக்கின்றதே! எந்தளவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் சுமந்திரனின் “ விதண்டாவாதத்திற்கு” ஆக்ரோஷமாக துணைபோகின்ற அளவு அந்த உறவு இருக்கின்றது.
சுமந்திரன் கூறுகின்றார், ஜனாதிபதியும் சில அமைச்சுகளை வைத்திருப்பதாலும் அமைச்சரவையின் தலைவர் என்பதாலும் இது கூட்டரசாங்கமே! என்கின்றார். மைத்திரிபால சிறிசேன என்பவர் அமைச்சுக்களை வைத்திருப்பதும் அமைச்சரவைக்கு தலைமை தாங்குவதும் ‘ ஜனாதிபதி என்பதனாலா? அல்லது UPFA தலைவர் என்பதனாலா?
மைத்திரி என்பவரிடம் ஜனாதிபதி பதவிக்கு மேலதிகமாக UPFA தலைவர் என்கின்ற ஒரு பதவி இருக்கின்றது; என்பது அவரது ஜனாதிபதிப் பதவி மீது சட்டரீதியான தாக்கத்தை ஏற்படுத்துமா? அவ்வாறாயின் அதற்கான சட்ட ஏற்பாட்டைக் கூறட்டும்.
கூட்டரசாங்கம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது. UPFA ஒரு கட்சி என்ற முறையில் அரசில் அங்கம் வகிப்பதில்லை; என்று தீர்மானித்திருக்கின்றது. ஜனாதிபதிக்கும் ஒரு கட்சித்தலைவர் என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைக் குழப்பி UPFA அரசின் பங்காளி என்று வியாக்கியானம் கொடுக்கின்றார். இந்த குழப்பலுக்கு நம்மவர்களும் துணைபோகின்றார்கள். இதன்மூலம் பேரினவாதிகளுக்குத் தீனிபோடப்படுகிறது.
இவ்வளவு தூரம் அவர்களுக்காக ஒத்துழைக்க முடியுமென்றால் கல்முனைப் பிரச்சினை ஒரு சிறிய எல்லைப் பிரச்சினை. தமிழர்களின் போராட்டம் என்பது இந்த சிறிய எல்லைப் பிரச்சினை இல்லை. அது பாரிய ஒரு தீர்வுத் திட்டத்தோடு சம்பந்தப்பட்டது. எனவே, இந்த ஒரு சிறிய விடயத்தைக்கூட விட்டுத்தர முடியாவிட்டால் அவர்களுடன் எதற்காக ஒத்துழைக்க வேண்டும்?
எனவே, முதலில் அவர்களுடன் பேசி நான்காகப் பிரிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவர்கள் உடப்பட்டு வராவிட்டால் நேரடியாக பிரதமருடன் பேசுங்கள். இந்தப் ஆட்சிப் போராட்டம் வெற்றிபெறுவதற்கு அவர்களும் பங்களிப்புச் செய்தார்கள்; என்றபோதும் உங்களது பங்களிப்பு அதைவிடப் பெரியது.
மட்டுமல்ல, அவர்கள் வெளியே இருந்து issue based ஆதரவுகொடுக்க நீங்கள் உள்ளே இருந்து ஆதரவு வழங்குகிறீர்கள். எனவே, பிரதமர் அவர்களுடன் பேசட்டும். அல்லது செய்துவிட்டு அவர்களுக்கு புரியவைக்கட்டும்.
அவசரமாக நான்காகப் பிரித்து வர்த்தமானியை வெளியிட ஏற்பாடு செய்யுங்கள். அத்துடன் கல்முனை தமிழ் உப பிரிவு செயலகத்தை மூடி தமிழர்களுக்கான உள்ளூராட்சி சபை அலகுக்குள் ஒரு முழுமையான பிரதேச செயலகத்தை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
கல்முனையின் பாராளுமன்ற பிரிதிநிதித்துவம் உங்கள் கட்சியிடமே உள்ளது. எனவே, கல்முனை தொடர்பாக தீர்மானம் எடுக்கும் முதல் உரிமை உங்களிடமே இருக்கின்றது. அதை பிரதமர் அங்கீகரிக்க வேண்டும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இதைச் செய்யமுடியாமல் அடுத்த தேர்தலில் வந்து கதை சொல்ல முனையாதீர்கள்.