இந்தோனேஷியாவின் சுன்டா ஸ்ரைட் பகுதியில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் 20 பேர் மரணம்

இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மித்த  ஸ்ரைட் (Sunda Strait) பகுதியில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 165 பேர் காயமடைந்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில், இதில் இருவரைக் காணவில்லை எனவும் கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

சுன்டா ஸ்ரைட் பகுதியில் உள்ள க்ரகடோ (Krakatoa) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்த சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதேவேளை, எரிமலை வெடிப்பின் காரணமாக ஆழிப்பேரலை ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது ஆய்வில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இந்தநிலையில், கடந்த செப்டெம்பர் மாதம், இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை நினைவுகூரத்தக்கது.