மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்ப் பெருமகன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசம் 100 சதவீதமான தமிழர்கள் வாழும் பகுதி. மாந்தை மேற்கிலே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆகிய மூவினங்களும் வாழ்கின்ற போதும், முஸ்லிம்களை விட மற்றைய இரண்டு சமூகங்களுமே பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த பிரதேச சபைகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கட்சிக் கொள்கைகளையும், அவரது செயற்பாடுகளையும் அங்கீகரித்து அந்தப் பிரதேச சபைகளை அவர் தலைமை தாங்கும் கட்சிக்கு மக்கள் வழங்கியிருப்பது, வன்னி மாவட்ட வரலாற்றிலே முத்திரை பதிக்கப்படவேண்டிய ஒன்றாக கருதப்படுகின்றது. காலாகாலமாக இவ்விரண்டு பிரதேச சபைகளும், தமிழரசுக் கட்சி அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்து வந்தவை. ஆனால், தற்போது அவை மக்கள் காங்கிரஸின் கைகளுக்குள்ளே சென்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்ட ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை சுகாதார அமைச்சர் டாக்டர் குணசீலன் மற்றும் அடம்பனை பிறப்பிடமாகக் கொண்ட வடமாகாண முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி டெனீஸ்வரன் ஆகியோர் மாந்தை பிரதேச சபையைச் சார்ந்தவர்களே. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அரசியல் நடத்தும் இந்தப் பிரதேசத்திலே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருப்பது தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றத்தையும், இன ஐக்கியத்திற்கு அவர்கள் காட்டுகின்ற சமிக்ஞையையுமே வெளிப்படுத்துகின்றது.
மாந்தை பிரதேசத்தின் தொன்மை மற்றும் அந்த மக்களின் வாழ்விடங்கள் தொடர்பாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
மன்னாருக்கு “மணிமகுடம்” போன்று விளங்குவது மாந்தையாகும். மாந்தை என அழைக்கப்படும் இந்தப் பிரதேசம் சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. பண்டைக் காலத்திலே மாந்தோட்டம் என்றும் பின்னர் மாதோட்டம் என்றும் இது அழைக்கப்பட்டது. அத்துடன் பண்டைக் காலத்திலே இது பிரசித்தி பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. ஈழத்து உணவும், ஏனைய ஆக்கங்களும் இந்த துறைமுகத்தின் ஊடாக இந்தியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. வியாபாரிகள் பொருட்களை மாந்தையில் சேமித்து வைத்து மாந்தோட்டை துறைமுகத்தினூடாக பிறநாடுகளுக்கு அனுப்பியதாக தெரிகின்றது.
மேலும், இப்பிரதேசத்தின் சிறப்பு அம்சம் பழம்பெரும் கோயிலான திருக்கேதீச்சரம், மாந்தை பிரதேசத்தில் அமைந்துள்ளதால், ஆண்டு தோறும் சிவபக்தர்கள் இப்புனித ஆலயத்தில் ஒன்றுகூடி விழா எடுப்பது அன்றும், இன்றும் நிகழும் சிறப்பான நிகழ்வாகும். கிறிஸ்வர்களின் புனித தேவாலயமான மடுத்திருப்பதி ஆலயமும் மாந்தை பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.
மாந்தை என்ற மாதோட்ட பிரதேசம் செழிப்பான கிராமங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. செந்நெல் விளையும் பொன்னான வயல்கள் மாந்தை கிராமங்களில் உள்ளன. மாந்தையை அண்மித்து அடம்பன், நெடுங்கண்டல், பிள்ளையார்பிட்டி, ஆட்காட்டிவெளி, கண்ணாட்டி, சாளம்பன், வண்ணார் குளம், ஆண்டான் குளம், இசங்கங் குளம், கறுக்காக் குளம், சொர்ணபுரி, வட்டக்கண்டல், வேளாகுளம், பள்ளிவாசல்பிட்டி, நெடுவரம்பு எனப் பல விவசாயக் கிராமங்கள் உள்ளன. மாந்தை தெற்கே உள்ள கிராமிய குளங்களுக்கு கட்டுக்கரை (Giant Tank) எனும் பெரியகுளம் தேவையான நீரை வழங்குகின்றது.
இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இந்த கிராமங்களில் வாழ்கின்றனர். இங்கே விவசாய பெருங்குடி மக்கள் மதத்தால் வேறுபட்ட போதும், மனத்தால் ஒன்றுபட்டு இன ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றனர்.
இதுபோலவே மாந்தை வடக்கில் பல விவசாய குடும்பங்கள் உள்ளன. கேதீச்சரம் பாப்பாமோட்டை, விளாங்குழி, மினுக்கன், கட்டைக்காடு, முள்ளிக்கண்டல், விடத்தல்தீவு, வள்ளமடு, கோவிற்குளம், குருந்தடி, புதுக்குளம், ஆத்திமொட்டை, இலுப்பக்கடவை, குருந்தங்குளம், வெள்ளாங்குளம், மூன்றாம்பிட்டி, கள்ளியடி, சன்னார், பெரியமடு முதலிய விவசாய கிராமங்கள் மாந்தை வடக்கில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் அனைத்துமே செந்நெல் விளைவிக்கும் பொன்னான வயல் நிலங்களை கொண்டவை. இக்கிராமங்களை அண்மித்த சிறுகுளங்களுக்கு “நாயாறு” எனும் பேராறு நீர் வழங்குகின்றது. நாயாற்றுக்கு பெரியமடுக்குளம், சன்னார்குளம் (வெளிமருதமடு) ஆகியவை நீரை வழங்குகின்றன.
மாந்தையின் தென்பகுதி கிராமங்களில் எல்லாம் ஆரம்ப பாடசாலைகள் பாடபோதனை செய்கின்றன. சிரேஷ்ட உயர்நிலை மாணவர்கள் அடம்பன் ம.வியில் கல்வி பெறுகின்றனர். இடப்பெயர்வுக்கு முன்னர் சிரேஷ்ட வகுப்புக்கள் மட்டுமே அடம்பன் ம.வியில் இருந்தன. தற்போது உயர்தர வகுப்புகளில் பாடபோதனை நடைபெறுகின்றது. இக்கலாசாலையில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். அதனால், மாணவர்களுக்கிடையே ஏற்பட்டுவரும் இன ஐக்கியம் சமூகத்தில் பிரதிபலித்து, மக்கள் மத்தியிலே இன ஐக்கியம் சிறப்பான அளவில் காணப்படுகின்றது. கிராம சபைகள் மற்றும் கிராம முன்னேற்றச் சபைகளும் மூன்று சமயங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இனஐக்கியத்தை மேலோங்கச் செய்து வருகின்றன.
மாந்தை வடக்கிலே அமைந்த கிராமங்கள் அனைத்திலும் ஆரம்ப பாடசாலைகள் கல்வி போதனை செய்கின்றன. எனினும், சிரேஷ்ட உயர்தர வகுப்புகளுக்கு பெரிய பாடசாலைகளை நாடவேண்டியுள்ளது. விடத்தல்தீவு அலிஹார் ம. வி, விடத்தல்தீவு ஜோசப் வாஸ் கல்லூரி, பெரியமடு ம.வி போன்றவை மாந்தை வடக்கில் உள்ள உயர்தர கல்விக்கான கலாசாலைகள் ஆகும்.
இடப்பெயர்வுக்கு முன்னதாக அலிஹார்.ம.வி ஆயிரம் மாணவர்களைக் கொண்ட அதிசிறந்த பாடசாலையாக விளங்கியது. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்கள் ஒற்றுமையாக இங்கு கல்வி பெற்றனர். அதேஅளவு சிறப்பான கல்வியை ஜோசப் வாஸ் கல்லூரியும் (றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்) பெரியமடு ம.வியும் அளித்தன. அலிஹார் ம.வியில் விஞ்ஞான கல்வி சிறப்பான நிலையில் இருந்தது. இடப்பெயர்வால் முஸ்லிம் மாணவர்கள் இல்லாத நிலையில் கல்வி போதனையில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
விடத்தல்தீவில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழ்ந்தனர். கிராமத்தின் கிழக்கில் செழிப்பான வயல் நிலங்கள் நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கின. மேற்குக் கடல், கடல்படு திரவியங்களும், மீன்களும் தருபவையாக விளங்குகின்றன. இதனால் உறமிக்க உழவர்களும், திறன்மிக்க மீனவரும் நாட்டின் செல்வத்தை அதிகரிக்கும் முக்கிய தொழில்களை செய்கின்றனர். முச்சமயத்திற்கும் பொதுவான கிராமிய வைபவங்கள் ஒற்றுமையை வளர்த்ததுடன், இன ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கின. விளங்குகின்றன.
மாந்தை வடக்கில் அமைந்த கோவிற்குளம், புதுக்குளம், ஆத்திமொட்டை முதலிய பல கிராமங்களில வாழும் மக்கள் பெரும்பாலும் இந்துக்களே. இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து திறன்மிக்க விவசாயிகளாக விளங்குகின்றனர். கிராமத்தை சூழவர உள்ள பலர் மாட்டுப் பண்ணைகளை வைத்திருந்து பால் உற்பத்தியை பெருக்கினர்.
மாந்தை வடக்கில் அமைந்துள்ள கிராமமான பெரியமடு, பழமர உற்பத்தியில் சிறந்த கிராமமாகும். மா, பலா, வாழைப்பழங்களும், பப்பாசி பழங்களும் கிராமத்தின் செழிப்பை அதிகரித்து மன்னார் மாவட்டம் முழுவதற்கும் பயன்படக்கூடிய விளைச்சலைத் தருகின்றது. மிளகாய் உற்பத்தியில் இந்தக் கிராமம் தலைசிறந்து விளங்குகின்றது. இவ்வாறு மாந்தையில் அமைந்த எல்லாக் கிராமங்களும் வாழ்க்கை வசதிகளைப் பெற்று மக்கள் திடமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ பொருத்தமானவையாக இருக்கின்றன.
எனினும் 30 வருடகால யுத்தம், வன்னி மாவட்டத்தில் மாந்தை பிரதேசத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அனைத்து சமூகங்களும் ஒட்டுமொத்தமாக தனது கிராமங்களைவிட்டு வெளியேறி அகதிகளாகவே வாழ்க்கை நடத்தினர்.
இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு புலிகளின் பலவந்த வெளியேற்றத்தினால் தென்னிலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். அதேவேளை காலத்திற்கு காலம் மாந்தை பிரதேசத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ, இந்து மக்களும் யுத்தக்கெடுபிடிகளால், அவ்வப்போது பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி அகதிகளாக வாழ்ந்தமை வரலாறு.
தமிழ் மக்கள் அகதி முகாம்களிலும் ஏனைய இடங்களிலும் வாழ்ந்தபோது, அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கை கொடுத்ததன் பிரதிபலிப்பாகவே, அவர்கள் காத்திருந்து இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் தமது நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர். இதுவே மாந்தை மேற்குப் பிரதேச சபையும், மாந்தை கிழக்கு பிரதேச சபையும் மக்கள் காங்கிரஸின் கைகளுக்குச் சென்றமைக்கு பிரதான காரணம் ஆகுமென சிலாகிக்கப்படுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அந்தக் கட்சி சிதறடிக்காது, போரினால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்விலே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.