எனக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்படுகின்றதா? இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்

மட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். 
வாகரை வடக்கு பிரதேச அபிவித்திக் குழுக் கூட்டம் கடந்த 2018.05.21ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இணைத்தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அங்கு வருகைத்தந்திருந்த ஒருவரால் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான செய்தி சக்தி தொலைக்காட்சியின் இரவு நேர செய்தியில் உரிய ஆதாரமின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.  
FILE IMAGE
இந்த விடயம் சம்பந்தமாக உடனடி விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை (2018.05.22) கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
‘வாகரையில்; சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், ‘வடி சாராயம்’ தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் அதனால் பலர் அப்பகுதியில் இறந்துள்ளதாகவும் அண்மையில் இடம்பெற்ற வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவ்வாறான எந்த சட்டவிரோத நடவடிக்கைகளும்; இடம்பெறவில்லை. மக்கள் மத்தியில் எனக்குள்ள நற்பெயரைக் கெடுப்பதற்காக இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட போலி  பிரச்சாரமாகும். முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பொய்யான தகவல்களையும் – விசமக் கருத்துக்களையும் பரப்பி வருகின்ற ஒரு ஊடகம் இந்த விடயத்துக்கு உடந்தையாக இருந்துள்ளது. குறித்த ஊடகம் அந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளது. 
மது பானம் என்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதை வெறுக்கின்றனர். இந்நிலையில், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுடன் என்னை தொடர்புபடுத்தி பொய்ப்பிரச்சாரங்களை செய்வதன் ஊடாக முஸ்லிம் மக்களை குழப்பலாம் என சதிகாரர்கள் கனவு காண்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்புகள் ஒருபோதும் நடக்காது. 
இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆதாரமற்ற கருத்தொன்றை முக்கியத்துவம் வாய்ந்த சபையொன்றில் தெரிவித்த நபர் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளேன்.’ – என்றார்.