அமைச்சரவை மறுசீரமைப்பின் போது இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முக்கிய வாய்ப்பளிக்கப்படவுள்ளது

தேசிய அரசாங்கத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாளை ஞாயிறன்று அமைச்சரவை மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், பொது நிறுவன அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகளில் பாரிய மாற்றங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்முறை அமைச்சரவை மறுசீரமைப்பின்போது, அரசாங்கத்தை வீரியத்துடன் கொண்டு நடத்தும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே முக்கிய, அதிகூடிய வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாரியளவில் ஊழல், மோசடியில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கெதிராக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் தற்போது பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 அமைச்சரவையில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.