தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லை: சபாநாயகர் தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வது தொடர்பான வாக்குவாதத்தின் போது சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதாயின் ஒப்பந்ததை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, சந்திசிறி கஜதீர ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவும் வலியுறுத்தினர். 

எனினும் எதிர்க்கட்சிகளின் வாதத்தை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல முழுமையாக புறக்கணித்தார். 

இந்நிலையில் இந்த வாக்குவாதத்தின் போது சபாநாயகர் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போது,

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பயணிப்பதாக அறிவித்துள்ளன. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை என்று தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்றார்.