இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட உரிமையை வீடமைப்பு அபிவிருத்தி சபைக்கு வழங்க UDA இணக்கம்!

Nizam
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தின் உறுதிப் பத்திரத்தை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் கோரிக்கையை ஏற்று நகர அபிவிருத்தி, நீர் வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த பணிப்புரையின் பேரில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமாபாத் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் உரித்து கடந்த பல வருடங்களாக நகர அபிவிருத்தி அதிகார சபையிடமே இருந்து வருகின்றது.
இந்த உரிமத்தை மாற்றுவதற்கு சில வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பம் செய்யப்பட்ட போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் அங்கு எழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நிர்வாகச் சிக்கல்களும் இழுபறிகளும் காணப்பட்டு வருவதுடன் அங்கு வசிக்கும் குடுபங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரம் வழங்க முடியாத நிலையும் காணப்படுகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டே கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான நிசாம் காரியப்பர் இவ்விடயத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீமினதும் நகர அபிவிருத்தி அதிகார சபையினதும் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதன் பிரகாரம் நேற்று இடம்பெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டு, தம்மிடமிருக்கும் அதன் உரிமத்தை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.