‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ : மன்னாரில் பிரதமர்

 

ஊடகப்பிரிவு– 

நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான மார்க், செல்லத்தம்பு, அமீன் உட்பட பலர் பங்கேற்று உரையாற்றினர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது கூறியதாவது, 

நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நாங்கள் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதேபோன்று மன்னார் பிரதேசத்தையும் முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்தப் பிரதேசத்தை முன்னேற்றுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றார். 

தற்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை, மேலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் அவருக்கு உதவி வருவதுடன் பாரிய பங்களிப்பையும் நல்கி வருகின்றது. அவரது வேலைத்திட்டங்களுக்கு எதிர்வரும் காலங்களிலும் நாம் பங்களிப்பை நல்குவோம். 

தற்போது விஷேடமாக மன்னார் மாவட்டம் தொடர்பில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ள திட்டங்களையும், முன்மொழிவுகளையும் நான் கூற விரும்புகின்றேன். 

மன்னார் கோட்டை, மன்னார் கச்சேரி; ஆகிய இரண்டையும் சுற்றுலா நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு வசதியான பஸ்தரிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. சிலாவத்துறை நகரத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இப்போதிருந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும், மேற்கொள்வதற்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சரவையின் அங்கிகாரத்தையும பெற்றுள்ளார். நானாட்டான் பிரதேசசபை, முசலி பிரதேசசபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் நகர நிர்மாண அபிவிருத்தி வேலைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். 

வீடமைப்புத் திட்டங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியும் உள்ளது. இந்தியா மற்றும் புத்தளம் ஆகியவற்றில் அகதிகளாக வாழும் மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எம்முடன் கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தினால் கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்து பின்னர், புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு தொழில்வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. 

மன்னார் நகரத்தில் பழைமை வாய்ந்த கட்டுக்கரைக்குளம், அகத்திமுறிப்புக்குளம், அளக்கட்டு ஆகிய மூன்று குளங்களையும் புனரமைத்து, அதன்மூலம் நீரைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச விவசாயிகள் மூன்றுபோக செய்கையை மேற்கொள்வதற்கும், அனுராதபுரம், வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் நீர்த் தேவையை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன், இளைஞர், யுவதிகள் மற்றும் பட்டதாரிகள் மற்றும் உயர்கல்வி கற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து, வருமான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மாத்திரமே இதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார் இவ்வாறு பிரதமர் கூறினார்.