இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏதுவான வகையில் 1954ம் ஆண்டு 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவை திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு சட்டமா அதிபர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இம்மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி, 1978ம் ஆண்டு 02ம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.