ஏப்ரல் மாதம் 2018-ம் ஆண்டுக்கான 11-வது சீசன் ஐ.பி.எல் தொடர் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களுக்கான ஏலம் நாளையும், நாளை மறுதினமும் பெங்களூரில் நடக்கிறது. ஏற்கனவே 18 வீரர்கள் 8 அணிகள் மூலம் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் ஏலத்தில் 360 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்தியர்களில் 62 பேர் சர்வதேச போட்டியில் விளையாடிய வீரர்கள் ஆவார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 60 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அதிகபட்சமாக 80 கோடி ரூபாய் செலவழித்து 25 பேர் கொண்ட அணியை ஏலத்தில் எடுக்கலாம். இந்த தொகை கடந்த ஆண்டு 66 கோடி ரூபாயிலிருந்து 80 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீரர்களின் ஏலப்பட்டியலில் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 36 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 13 பேர் இந்தியர்கள், 23 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 32 வீரர்களும், ரூ.1 கோடிக்கு 31 வீரர்களும், ரூ.75 லட்சத்துக்கு 23 வீரர்களும், ரூ.50 லட்சத்துக்கு 122 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.