தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்தால், அவரது இடத்துக்கு மற்றொருவரை நியமிப்பதாயின் அவ்வுறுப்புரிமைக்கு உரித்தான கட்சியின் செயலாளர், நியமிக்கப்பட உள்ள உறுப்பினருக்கல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு நியமனத்துக்கான சிபாரிசுக் கடிதத்தை அனுப்புவார்.
அரச அச்சகத்துக்கு நியமனம் தொடர்பாக அறிவிக்கும் கெசட்டை வெளியிடுமாறு கட்சிச் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்த அன்றே ஆணைக் குழுத் தலைவர் விபரக் கடிதம் அனுப்புவார்.கெசட், கடிதம் வழங்கப்பட்ட அன்று நள்ளிரவே வெளியிடப்படும். அடுத்த நாள் கெசட் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தைச் சென்றடையும். அடுத்து வரும் நாடாளுமன்ற அமர்வில் குறிபடும் பெயருக்குரியவர் உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்வார்.
இந்த நியமன விடயத்தில் இவ்வாறான எந்த நடைமுறையும் பின்பற்றப்படாமல் ஐ.தே.கட்சியின் செயலாளர் நசீருக்கு கடிதத்தை வழங்கியுள்ளார். நசீர் கடிதத்தை அவரது தலைவர் றவூப் ஹக்கீமிடம் கையளித்துள்ளார். இவ்விரண்டு கையளிப்புகளின் போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நசீர் அவர்களே! நீங்கள் அக்கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கொடுத்திருக்கலாமே! இன்றே அது கெசட் பண்ணப்பட்டிருக்கும் அல்லது அவர் தேர்தல் காலத்தில் நியமிக்க முடியாது, தேர்தல் முடிந்த உடனே கெசட் பண்ண அனுப்புகிறேன் என்று உங்களிடமே கூறியிருப்பார். இந்த வகையில் நடைமுறை இருந்திருந்தால் உங்களுக்கும், ஊருக்கும் நிச்சயமான உத்தரவாதம் கிடைத்திருக்குமல்லவா?
நசீர், ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதத்தை வழங்குவது போல் புகைப்படம் வெளியாகியுள்ளதா என்று தெரியவில்லை.
இருந்தாலும்,ஹஸனலிக்கு வழங்கிய சல்மானின் இராஜினாமாக் கடிதம் பற்றிய நினைவு மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.