அண்ணல் நபி (ஸல்) அவர்கள், எழுதவும் படிக்கவும் பழகாதவர்கள். இருப்பினும் உலக விஷயங்களை உணர்ந்து தெரிந்து கொள்வதில் அதிக ஆற்றல் மிக்கவர்களாக விளங்கினார்கள். அதனால் அவர்கள் ‘உம்மி நபி’ என்று அழைக்கப்பட்டார்கள்.
தனது உலக வருகை மிக உன்னதமானது என்பதை இளம் வயதிலேயே நபிகளார் புரிந்து கொண்டார்கள். இதனால் அவர்களது தேடல் பரந்து விரிந்து இருந்தது. ‘இந்த பிரமாண்ட மான பிரபஞ்சம் யாரால் உருவானது, நான் எங்கிருந்து புறப்பட்டு வந்தேன், எங்கே சென்று சேரப்போகின்றேன், எனது இறைவன் யார்?’ என்ற கேள்விகளுக்கு விடை காண அயராத முயற்சியில் ஈடுபட்டார்கள்.
உயரிய இந்த சிந்தனைகள், உண்மையாளராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும், ஒழுக்கம் மிக்கவர்களாகவும், நீதியை கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும், அனைவரையும் அரவணைக்கும் அன்பாளராகவும் நபிகளாரை மிளிரச் செய்தது.
அந்த காலகட்டத்தில் மக்களிடம் காணப்பட்ட, மத இன வேறுபாடுகள், பல கடவுள் கொள்கைகள், மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் அறியாமை, பெண் குழந்தைகள் பிறந்தால் உயிரோடு மண்ணில் புதைத்திடும் மடமை, வட்டி என்னும் ஆயுதம் கொண்டு வறுமையில் வாடும் மனிதர்களை வதைத்தது, போகப்பொருளாக பெண்களை பயன்படுத்தியது போன்ற கொடுஞ்செயல்களை கண்டித்தார்கள். இத்துடன் மது மயக்கத்தில் வீழ்ந்து கிடந்த மனித சமுதாயத்தை மீட்டெடுத்து நேர்வழிகாட்ட விரும்பினார்கள்.
அதற்காக ‘ஹீரா’ என்ற மலைக்குகையில் தனிமையை நாடி சிந்தனையில் ஆழ்ந்தார்கள், தனது 40-ம் வயதில் இறையருளால் நிறை நிலையை அடைந்த நபிகளார், இறைச்செய்தியை பெறத்தொடங்கினார்கள். இறைச்செய்தியின் மூலம் நேர் வழியின் பக்கமும், சத்தியத்தின் பக்கமும், சமத்துவத்தின் பக்கமும் மக்களை அழைத்தார்கள்.
‘(இந்த குர்ஆன்) மனிதர்களுக்கு (உண்மையின்) விளக்கமாகவும். நேர்வழி காட்டியாகவும், பயபக்தியுடைய மக்களுக்கு நற்போதனையாகவும் உள்ளது’ என்பது திருக்குர்ஆன் வசனமாகும். (3:138)
இந்த சத்தியத்தை கண்ட எதிர்மறை சிந்தனையாளர்கள் இடி விழுந்ததைப் போன்று திகைத்து நின்றார்கள். ஆதிக்க சக்திகள் அதிர்ந்து போனார்கள். இந்த சத்திய ஜோதியை தங்களது வாயால் ஊதி அணைத்திட சதி செயல்களிலும், அழிச்சாட்டியத்திலும் ஈடுபட்டார்கள். ஆனால், அண்ணலாரின் அகிம்சையின் முன்பு இவை அனைத்தும் தோல்வியை தழுவின.
‘அழகிய பெண்ணை மணமுடித்து தருகிறோம். ஆட்சி அதிகாரத்தையும் தருகிறோம். அளவற்ற செல்வத்தை அள்ளித் தருகிறோம். முஹம்மதே, கடவுள் ஒருவரே என்பதையும், இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற சமத்துவத்தையும் கைவிட்டால் நீங்கள் விரும்பியதை நாங்கள் தருகிறோம்’ என நபிகளாரிடம் ஆசை வார்த்தை கூறினார்கள்.
உலகத்தின் இயல்பை நன்கு புரிந்து கொண்ட நபிகளார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘சூரியனையும், சந்திரனையும் என் கையில் கொண்டு வந்து தந்தாலும், நான் உணர்ந்த உண்மையான ஓர் இறைக்கொள்கையை ஒரு போதும் கைவிட மாட்டேன்’ என்றார்கள். மேலும் அந்தக்கொள்கையில் உறுதியுடனும் நின்றார்கள்.
நல்லோர்கள் அனைவரின் ஒட்டுமொத்த அடையாளமாக திகழ்ந்த நபிகளார், இவ்வுலகில் பூரணமான ஒரு நிறை நிலை வாழ்வை வாழ்ந்து வழி காட்டினார்கள். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்கள் மீது (‘வஹீ’ என்ற இறைச் செய்தியை) தன்னுடைய அருட்கொடையால் இறைவன் இறக்கி வைத்தற்காக (அவர்கள்) பொறாமை கொண்டு, அவன் இறக்கி வைத்த (இந்த குர்ஆனை) நிராகரித்து (கொண்டு) உலக இச்சைகளுக்கு பகரமாக தங்களது ஆன்மாக்களை விற்று (உலகில்) விடுகிறார்களோ, அச்செயல் மிகவும் கெட்டதாகும். (அதனால்) இறைவனின் கோபத்திற்கு (அவர்கள்) ஆளாகி விட்டார்கள். இறைவனை நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு’. (2:90)
இந்த பேரண்ட பெருவெளியில் இருப்பவை அனைத்தும் ஓர் இறையாற்றல் கொண்டே வெளியாகி இருக்கின்றது. அந்த இறையாற்றல் இல்லாமல் எதுவும் இங்கு இல்லை. நுண்ணறிவு கொண்டு ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது, இந்த இறையாற்றல் இல்லாமல் எதனாலும் இயங்க முடியாது. அது அசையும் பொருளாக இருந்தாலும் சரி, அசையாத பொருளாக இருந்தாலும் சரி, அவனது ஆற்றலின்றி எதுவும் இயங்காது.
நபிகளார் வலியுறுத்தும் ஓர் இறைக்கொள்கை மிகவும் போற்றத்தக்க ஒன்றாகும். ‘உருவமற்ற இறைவனுக்கு நீங்கள் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு போதனை செய்தார்கள். ‘தொடக்கமும் முடிவும் இல்லாத பேராற்றல் ஒன்றே. அனைத்தையும் உருவாக்கியதும் அந்த பேராற்றலே. எல்லா ஆற்றல்களுக்கும் மூல காரணமாக இருப்பதும் அவ்வாற்றலே. கூடுதல் குறைவின்றி என்றும் நிலையாக நிலைத்து இருப்பதுவும் அந்த பேராற்றலே’ என்றார்கள்.
அந்த பேராற்றலுக்கு உருவமே இல்லை என்கிறபோது அதற்கு பிறப்பும் இல்லை. பிறப்பே இல்லை என்கின்றபோது அதற்கு பெற்றோர்களும் இல்லை. பிறவாமல் நின்று அனைத்தையும் பிறக்கச் செய்கின்றது. அனைத்தின் தேவைகளையும் அளிக்கின்ற அந்த இறையாற்றலுக்கோ எந்த தேவையும் இல்லை. அதனை குர் ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘நபியே! நீர் கூறுவீராக: இறைவன் ஒருவனே! அவன் (எவரிடத்திலும்) தேவையற்றவன், அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை, (அத்தனித்தவனுக்கு) ஒப்பாக எதுவும் இல்லை’ (112:1-4).
‘நான்’ என்ற அகங்காரமே, இப்பிரபஞ்ச பேராற்றலின் நுண் இயக்கத்தை உணர விடாமல் மனிதனை தடை செய்கிறது. அவனது நுண்ணறிவு செயல்படும்போது, எங்கும் ஏகமாய் நிரம்பி இயங்குவது இறையாற்றல் ஒன்றே என தெரிந்து கொள்ள முடியும்.