அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் : அமைச்சர் றிசாட்
-அமைச்சரின் ஊடகப்பிரிவு–
உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள்காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத் திறப்புவிழா நிகழ்வு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இடம்பெற்றபோதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் மற்றும் மக்கள் காங்கிரஸின் செயலளார் நாயகம் எஸ்.சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பி.மஜீத், எம்.என்.எம்.நபீல், டாக்டர்.முனாசிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாக அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் காலூன்றி, எமது கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது. நாங்கள் இந்தப் பிரதேச மக்களுக்குஅபிவிருத்திகளையோ, தொழில்வாய்ப்புக்களையோ, உதவிகளையோ செய்யாத நிலையிலேயேதான், இறைவனை முன்னிறுத்தி வேட்பாளர்களை நாம் களமிறக்கினோம். மிகக்குறுகிய காலத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு சுமார் 33,000 வாக்குகளை பெற்றபோதும், இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்ததினால்,பாராளுமன்றத்துக்கான ஆசனங்களைப் பெற முடியாது போய்விட்டது.
எமக்கு அரசியல் அதிகாரம் கிடைக்காத போதும், பொதுத் தேர்தலில் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முடியுமானவரை நிறைவேற்றித் தந்துள்ளோம். இங்கு வாழும் மக்களினதும், எமது கட்சியின்முக்கியஸ்தர்களினதும் மனச்சாட்சிக்கு இது நன்கு தெரியும்.காலாகாலமாக அரசியல் அதிகாரத்திலிருந்தவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாம் மனச்சாட்சியுடன் தொழிற்பட்டிருகின்றோம்.
எத்தனையோ தடைகள், முட்டுக்கட்டைகள், அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகள், இந்தப் பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் கொண்டவர்களின் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின்மத்தியிலேயே, நாம் இதயசுத்தியுடன் எமது பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.
தேர்தலுக்காக நாம் அரசியல் செய்யும் கட்சியல்ல. தேர்தல்காலங்களில் மட்டும் உங்களை நாடி வருபவர்களும் அல்லர்.சிறுபான்மை மக்கள் வாழும், குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் எந்தவொருபிரதேசத்திலும் அநியாயம் நடந்தால், அவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியையும், வலிமையையும் இறைவன் எமக்குத் தந்துள்ளான். நாம்அரசாங்கத்தில் இருந்தபோதும், மக்களுக்கு அநியாயம்இழைக்கப்பட்டால் ஒருபோதும் அடங்கி இருக்கமாட்டோம்.கடந்தகால வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் நாம் புதிதாக உருவாக்கிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், மயில் சின்னத்தில் நாம் களமிரங்குகின்றோம். இம்முறை தேர்தலில் இந்தப் பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றக் கூடிய விதத்தில், இங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களின் செயற்பாடுகள் எமக்கு நம்பிக்கை தருகின்றது.
அத்துடன், அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு பெரும்பாலான பிரதேச சபைகளைக் கைப்பற்றி, இந்த மக்களின் எதிர்கால விமோசனத்துக்கு வழிவகுக்கும் என நான்நம்புகின்றேன் என்றார்.