(வீடியோ) எகிப்து பள்ளிவாசல் மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 235 பேர் பலி

எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில்  உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வெள்ளிக்கிழமை  வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 235 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிராத்தனைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதனையடுத்து, எகிப்து பிரதமர் அப்துல் பாத்தா பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசணை கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும் ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்று இன்னும் தெரியிவில்லை.கடந்த ஜூலை 2013-ல் எகிப்திய ராணுவம் இஸ்லாமிய ஜனாதிபதியான மொஹமத் மோர்சியை வீழ்த்தியதையடுத்து, சமீப காலங்களில் ஜிகாதி போராளிகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அப்போதிலிருந்து, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்பவர்களுடன் இணைந்த சினாய் மாகாண குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.