லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் ரயில் நிலைய தாக்குதல் பீதி முடிவுக்கு வந்தது

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஆக்ஸ்ஃபோர்ட் வீதி அருகே பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால், பெருமளவில் மக்களிடம் பீதி ஏற்பட்டது.

சந்தேகத்துக்குரிய எந்த நபரையோ, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய அடையாளம் எதையுமோ தாங்கள் பார்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் மற்றும் பாண்ட் வீதி சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

பீதியால் மக்கள் கூட்ட நெரிசலில் முந்தியடித்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

லண்டன் போலீசார்
மாலை 4.38 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக பெருமளவில் தங்களுக்கு தகவல்கள் வந்ததாகவும், துவக்கத்தில் அந்த சம்பவத்தை பயங்கரவாத் தாக்குதல் சம்பவம் போல கருதி நடவடிக்கையில் இறங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, அருகில் உள்ள பாண்ட் வீதி சுரங்க ரயில் நிலையமும் மூடப்பட்டது.

லண்டன் போலீசார்

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, எந்த சம்பவமும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தங்களது நடவடிக்கைகளை மாலை 6.05 மணிக்கு போலீசார் நிறுத்திக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்கள் தீவிர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தப் பதற்றம் ஏற்பட்டது.

பெருமளவில் மக்கள் பதற்றத்துடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே ஓடிவந்தனர் என்றும், பலர் அழுது கொண்டும், பீதியில் கூச்சலிட்டவாறும் ஓடிவந்ததாகவும், பலர் தங்கள் கையில் வைத்திருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓடியதாகவும் பிபிசி செய்தியாளர் ஹெலன் புஷ்பி தெரிவித்தார்.

சிறப்புப் படை போலீசார் மிக விரைவாக செயல்பட்டு களத்தில் இறங்கியதை லண்டன் மேயர் சாதிக் கான் பாராட்டியுள்ளார்.