மொஹமட் பாதுஷா
நடைமுறை வாழ்க்கையின் எல்லா விடயங்களிலும் ‘எல்லைகள்’ மிக முக்கியமானவையாக இருக்கின்றன. நமது செயற்பாட்டின் வீச்சையும் வரம்பெல்லையையும் தீர்மானிப்பவையாக, பொதுவாக எல்லைகள் இருப்பதுண்டு.
அதுவும் ஆட்சியதிகாரத்தின் எல்லை என்பது, உலக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்துவதாகக் காணப்படுகின்றது.
இப்போது, நமது நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தொகுதி நிர்ணயத்துக்கும், சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், சமூக, அரசியல், பொருளாதார விடயங்களில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியிருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்தை, இவ்வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதி, அரசாங்கம் நிறைவேற்றியது. அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் போன வெஞ்சினத்தில், அரசாங்கம் இச்சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியது.
இந்த அடிப்படையில், கலப்பு முறை என்று சொல்லப்படும் ‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ அடிப்படையிலான தேர்தல் முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலும் நடைபெறவிருப்பதால், மாகாணங்களின் தொகுதிகளை வரையறை செய்ய வேண்டிய, சட்டத் தேவைப்பாடு எழுந்திருக்கின்றது.
அந்தவகையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணயக் குழுவுக்கு எழுத்துமூலம் யோசனைகள், கருத்துரைகளை முன்வைப்பதற்கான காலம், இம்மாதம் இரண்டாம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது வாய்மொழிமூலம் அல்லது எல்லை மீள்நிர்ணயக் குழுவின் முன் நேரடியாக ஆஜராகி, கருத்துகளைச் சமர்ப்பிக்கும் பணிகள் பிராந்திய ரீதியாக நடைபெற்று வருகின்றன.
இக்குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தமிழ், சிங்களப் புதுவருடம் வருவதற்கிடையில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு உரித்தானவர்கள் பலர், எதிர்கொண்டுள்ள விசாரணைசார் நெருக்கடிகள், ஆட்சிக் கட்டமைப்பில் பெரிய பிரளயங்களை நிகழ்த்தவில்லை என்றால், இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, புதிய தேர்தல் முறைமையின் கீழ், வாக்கெடுப்பு இடம்பெறவிருக்கின்ற ஒரு சூழலில், தொகுதி நிர்ணய விடயத்தில் முஸ்லிம்கள் அதீத அக்கறை செலுத்த வேண்டியிருக்கின்றது.
முன்னதாக, உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை நடாத்துவதற்கு முன்னோடியாக, ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளின் கீழும் இருக்கின்ற வட்டாரங்களின் எல்லைகள், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மீள்வரையறை செய்யப்பட்டன.
ஆனால், முஸ்லிம் அரசியல் கட்சிகளோ, மக்களோ இதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அதேபோன்று, உள்ளூர் அதிகார சபைகள் திருத்தச் சட்ட மூலம், நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட வேளையிலும், அரசியல் தலைவர்கள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்வோர், அதிலுள்ள முஸ்லிம்களுக்கு பாதகமாக விடயங்களை நீக்குவதில் ஒற்றைக்காலில் உறுதியாக நிற்காமல், ‘நான்முந்தியா நீ முந்தியா’ எனப் போட்டிபோட்டுக் கொண்டு அச்சட்டத்துக்கு ஆதரவளித்து, பெருந்தேசியத்துக்குத் தமது விசுவாசத்தைக் காட்டினார்கள்.
அவ்வாறே, மாகாண சபை தேர்தல்கள் சட்ட மூலத்துக்கும் கையைத் தூக்கி ஆதரவளித்துவிட்டு,‘நாங்கள் போராடிச் சாதித்திருக்கின்றோம்’ என்று அறிக்கை விட்டனர். எனவே, இவ்வாறான வரலாற்றுத் தவறுகள், இம்முறை தொகுதி நிர்ணயத்திலும் இடம்பெறாதவாறு பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதிக்கும் பொதுமகனுக்கும் இருக்கின்றது.
இலங்கையில் முதன்முதலாக அரசமைப்பின் 76(2) பிரிவுக்கு அமைவாக, 1947 ஆம் ஆண்டு தேர்தல் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டன. அப்போது நாட்டின் சனத்தொகை சுமார் 65 இலட்சமாக இருந்தது.
இதன்படி, 89 தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டதுடன், இதில் 25 தொகுதிகள் 1,000 சதுர மைல் பரப்பையும் 64 தொகுதிகள் 75,000 மக்களுக்கு ஓர் உறுப்பினர் என்ற வகையிலும் நிர்ணயிக்கப்பட்டன.
பலஉறுப்பினர் தெரிவுத் தொகுதிகளாக கொழும்பு மத்தி, கடுகண்ணாவை, அம்பலாங்கொட, பலப்பிட்டிய மற்றும் பலாங்கொடை தொகுதிகள் உள்ளிட்டவை காணப்பட்டன.
அதன்பின்னர், 1959 ஆம் ஆண்டின் அரசமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, இன்னுமொரு எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அப்போது, இலங்கையில் மாகாண சபைகள் முறை அமுலில் இல்லை என்பதால், மாகாண சபைத் தேர்தலில் தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் தாக்கம் செலுத்தவில்லை.
எவ்வாறிருப்பினும் இனக்குழுமங்களின் அடிப்படையில், ஓரளவுக்குப் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, இந்த இரண்டாவது தொகுதி நிர்ணயம் வழிசெய்தது எனலாம்.
இதில், பலஉறுப்பினர் தெரிவுத் தொகுதியாக, கொழும்பு மத்தி, கொழும்பு தெற்கு, அக்மீமன, மூதூர், பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட தொகுதிகள் வரையறை செய்யப்பட்டடன.
சுமார் 10 இலட்சம் மக்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருந்த காலப்பகுதியில், மூன்றாவது எல்லை நிர்ணயம் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1971 ஆம் ஆண்டிருந்த 13 மில்லியனுக்கு குறைவான சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் 160 தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இத்தேர்தல் தொகுதிகளில் இருந்து, 168 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பல கண்துடைப்பான நகர்வுகளை வரலாற்றில் மேற்கொண்ட ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அறுதிப் பெரும்பான்மை அரசாங்கம், அடுத்த எல்லை நிர்ணயத்தை, சூட்சுமமான முறையில் நிகழ்த்திக் காட்டியது என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், 1976 இல் நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகள் அவ்வாறே இருக்கத்தக்கதாக, ஒன்பது மாகாணங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்கள் என்ற ரீதியில் அதிகரிக்கப்பட்டதுடன் மேலும் 29 தேசியப்பட்டியல் (எம்.பி) ஆசனங்களும் உள்வாங்கப்பட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது.
அதன்பின், மாகாண சபை முறைமை அறிமுகமான போதும், விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைக்கு வந்ததால்,தொகுதிகள் இவ்விடயத்தில் பெரிய செல்வாக்கை செலுத்தவில்லை என்றே கூறவேண்டும். அப்படியாயின், அவ்வாறான முதலாவது தேர்தலாக அடுத்த மாகாண சபைத் தேர்தல் இருக்கும்.
இலங்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறைமை அமுலில் இருந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் தொகுதிகளைப் பிரிக்கின்றபோது, பொதுவாக இனக்குழுமங்களுக்கும் குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கும் பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, 1971 தொகுதி நிர்ணயத்தில், இனத்துவ பிரதிநிதித்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட போதிலும் கண்டி, தெல்தெனிய, வியலுவ மற்றும் கொழும்பு மேற்கு பிரதேசங்களில், சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக, அரசியல் அவதானிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
அதுமட்டுமன்றி, இந்த எல்லை நிர்ணயங்களின்போது, கிழக்கு மாகாணத்தில் பிரதேச வாரியாக, ஊர்வாரியாக வரலாற்றுத் தவறுகள் நிகழ்த்தப்பட்டன. நிந்தவூர் தொகுதி இல்லாமலாக்கப்பட்டு, பொத்துவில் தொகுதி உருவாக்கப்பட்டது. இவ்வேளையில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு அதிக சனத்தொகை கொண்ட ஊரான அக்கரைப்பற்று சவாலாகி விடக்கூடாது என்பதற்காக, நிந்தவூரைச் சேர்ந்த எம்.எம்.முஸ்தபா எம்.பி, அக்கரைப்பற்று என்ற ஒரு தனி ஊரை, பொத்துவில், சம்மாந்துறை என இரு தொகுதிகளாக ஆக்கியதாக இன்றுவரையும் அவர் மீது பெரும் பழிச்சொல் இருக்கின்றது. இவ்வாறு இன்னும் எத்தனையோ தவறுகள், நாடெங்கும் இடம்பெற்றிருக்கின்றன.
எனவே, இந்த உதாரணங்களின் மூலமும் அனுபவங்களின் மூலமும் கடந்தகாலத் தொகுதி நிர்ணயத்தில் ஏற்பட்ட தவறுகளும் அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும் உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தால், இதைச் சரிசெய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக இம்முறை மேற்கொள்ளப்படும் தொகுதி மீள்நிர்ணயத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், சில சிவில் அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும் எல்லை மீள்நிர்ணயக் குழுவுக்குப் பரிந்துரைகளை முன்வைத்த போதும், பல அரசியல்வாதிகள் வழக்கம்போல, சுரணையற்று இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணம் உட்பட, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இப்போது இருக்கின்ற தொகுதிகளில், பாரிய மாறுதல்கள் இன்றி, அதேபோன்றே எல்லையிடப்படுமாக இருந்தால், அத்தொகுதிகளில் புதிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெறுமாக இருந்தால், முஸ்லிம்களின் மாகாண சபை, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கணிசமாகக் குறைவடைவதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
கிழக்கில் கூட முஸ்லிம்கள், மாகாண சபைத் தேர்தலில் ஒருமித்து, ஒரு கட்சியில் போட்டியிட்டாலேயே கணிசமான உறுப்பினர்களை பெற்றுக் கொள்வது சாத்தியமாகும்.
இப்புதிய தேர்தல் முறைமை தொடர்பாக, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மார்தட்டிக் கொண்டாலும், நடைமுறைச் சூழலில் 50:50 என்கின்ற விகித சமன்பாடு, முஸ்லிம்களுக்குச் சாதகமானதல்ல என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
விகிதாசாரத் தேர்தல் முறைமையில் கிடைத்த உறுப்பினர்களைக் கூட, முஸ்லிம்கள் உறுதிப்படுத்திக் கொள்ள இயலாத நிலைமைகளே ஏற்படலாம். இதேவேளை 50 சதவீத பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படுபவரை விட, தொகுதிவாரியாகத் தெரிவு செய்யப்படும் வேட்பாளரே, இனம் கடந்த மக்கள் ஆணையைப் பெற்றிருப்பார் என்ற அடிப்படையில், இந்த 50இற்கு 50 பொருந்தாது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். எது எப்படியிருந்தாலும், பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது என்பதில் இருவேறு அனுமானங்கள் இல்லை.
தொகுதிகளைச் சரியாக வகுப்பதன் ஊடாக, இந்நிலை ஏற்படாமல் தடுக்கலாம் என்பது உண்மையே. ஆனால், கிழக்கில் கூட முஸ்லிம்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப நிலங்கள் கிடையாது.
ஒரு தொகுதிக்குரிய மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிலத்தையோ ஏனைய வளங்களையோ ஆதாரமாகக் கொண்டு, ஒரு தொகுதியைப் பெறக்கூடிய வாய்ப்பு தமிழ், சிங்கள மக்களுக்கு கிடைக்குமென்றாலும் முஸ்லிம்களுக்கு கிடைக்காது.
ஓர் அணியில் போட்டியிட்டு, அந்த அணியின் வேட்பாளருக்கே தொகுதியில் இருக்கின்ற எல்லா முஸ்லிம்களும் வாக்களித்து, வெற்றியை உறுதிசெய்யப் போவதும் இல்லை என்பதை வைத்துப் பார்க்கின்ற போது, நிலைமைகள் இன்னும் மோசமடையும் என்ற அச்சமே மேலெழுகின்றது.
தென்னிலங்கையில் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்ற நிலையில் தனி முஸ்லிம் தொகுதிகள் புதிதாக உருவாக்கப்படுவதற்கு சாத்தியங்களே இல்லை. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளையும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் செல்வாக்குடன் வாழும் முஸ்லிம்கள் பிரதேசங்களின் புதிய தொகுதிகளையும் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
இனரீதியாகத் தொகுதிகளை உருவாக்க முடியாத பகுதிகளில், ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி, எல்லா இனங்களையும் சமமாக மதிக்கும் எந்த இனத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளருக்காவது வாக்களிப்பதே சிறந்தது எனத் தோன்றுகின்றது.
தேர்தல்த் தொகுதிகளை நிர்ணயம் செய்யும் போது, பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. நீண்டகாலம் புரையோடிப்போன காணி, எல்லைப் பிரச்சினைகளும் பிரதேசவாதங்களும் இதில் கடுமையான செல்வாக்கைச் செலுத்தும்.
எவ்வாறிருப்பினும், தொகுதிகளை வரையறுக்கும் போது, அக்கரைப்பற்றை இரண்டாக உடைத்ததுபோல், ஓர் ஊரை இரு தொகுதிகளுக்குள் உள்ளடக்காமல், ஓர் உள்ளூராட்சி சபைக்குள் அல்லது பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தை, ஏதாவது ஒரு தொகுதியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று துறைசார் புலமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன்,கிராமசேவகர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை நிர்ணயிப்பது மிகவும் சிக்கலானதும் சாத்தியமற்றதும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இவற்றையெல்லாம் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் தொகையையும் பிரநிதிநிதித்துவத்தையும் ஊர்வாதத்தையும் முன்னிலைப்படுத்தி மட்டும் தொகுதிகளைப் பிரிக்காமல், அங்கு வாழும் மக்களுக்குரிய காணிகள் மற்றும் வளங்களும் உள்ளடங்கும் விதத்தில் தொகுதி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அத்துடன், எல்லை நிர்ணயக் குழுவுக்கு கருத்துகளைச் சமர்ப்பிப்பதன் ஊடாகவும் ஏனைய அரசியல் அழுத்தங்களைக் கொடுப்பதன் ஊடாகவும், புதிதாக நிர்ணயிக்கப்படவுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டாலும் குறையாமலாவது பாதுகாக்க வேண்டிய ஒரு காலசூழலில் முஸ்லிம் மக்கள் இருக்கின்றனர்.
ஆனால், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அமைச்சர்கள்,
எம்.பிக்களும் வழக்கம்போல, தமது பொறுப்பற்ற தனத்தை இதிலும் வெளிப்படுத்தி நிற்கின்றனர். குறிப்பாக, எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்த சில அரசியல்வாதிகள், மேற்சொன்ன விடயங்களை எல்லாம் கவனிக்காமல், தமது வெற்றிக்கு வாக்களிக்கக் கூடிய ஊர்களை ஒன்றாகச் சேர்த்தும் ஒரு பிரதேச சபைக்குள் வரும் வட்டாரங்களை இரண்டு வெவ்வேறு தொகுதிகளுக்குள் உள்ளடங்கும் விதத்திலும் முன்மொழிவுகளை முன்வைத்திருப்பது,இன்னும் இவர்கள் திருந்தவில்லையே என்ற கவலையை ஏற்படுத்துகின்றது.
எனவே, இந்நிலைமைகள் மாற வேண்டும். பொதுவாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களும் காணி மற்றும் வளம் பற்றிய உரிமைகளும் பாதுகாக்கப்படக் கூடிய விதத்தில் மாகாணங்களின் தேர்தல் தொகுதிகளை நிர்ணயம் செய்வதற்கு முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் எம்.பிக்கள் மட்டுமன்றி அடிமட்டத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் பொதுமகனும் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. பஸ்போய்விட்ட பிறகு கைகாட்டி பலனேதும் கிடைக்காது.
நன்றி TM