விசாரணைகளின் போது சிறப்புரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் , பிரதமர் தரப்பிலிருந்து நிபந்தனை

 இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.
 
 
 
 
பிரதமருக்குரிய சிறப்புரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியே இவ்வாறு நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவே பிரதமரிடம் கேள்விகளை எழுப்புவார் என்றும் தெரியவருகின்றது.
 
 
 சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆஜராகுமாறு பிரதமருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.பிணைமுறி மோசடியில் பிரதமருக்கும் தொடர்பிருக்கின்றது என்றும், அவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மஹிந்த அணியான பொது எதிரணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
 
 
 இந்நிலையில், விசாரணைக்கு முகங்கொடுப்பதற்குத் தான் தயார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளதால் 20ஆம் திகதி அவர் ஆணைக்குழுவில்ஆஜராகுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 
 இலங்கை அரசியலில் பிரதமர் பதவியை வகித்த ஒருவர், விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியதில்லை.அழைப்பாணைகள் விடுக்கப்பட்டாலும் பிரதமர் சார்பில் அவரது சட்டத்தரணியே ஆஜராகும் நிலை இருந்து வந்தது. எனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் ஆஜராகுவதால், அவரின் சிறப்புரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.