ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பாக முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார்.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் தலைமை காரியாலயத்தில் நேற்றைய தினம்(17) மாலை 03.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது , சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் விசேட அதிகாரியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்படும் இனவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது NFGG தவிசாளர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.வெறுப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கங்கள் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாகவே அளுத்கமகலவரம் போன்ற பாரிய வன்முறைகளாக அவை மாறியது எனவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்தே இனவாத தாக்குதல்கள் பெரும்பாலும் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி சகல மக்களும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவே புதிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கிய போதிலும் தற்போதைய அரசாங்கம் கூட அதனை செய்வதற்கு தொடர்ந்தும் தவறி வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதன் விளைவாக தற்போது காலி – ஜின்தோட்டையிலும் முஸ்லிம்களை இலக்கு வைக்கும் வன்முறைகள் ஏற்பட்டுள்ளன என்பதனையும் அப்துர் ரஹ்மான் கூறியுள்ளார்.சட்டம் ஒழுங்குகளை நிலை நாட்டுவதில் பாராபட்சமான போக்கு நிலவுவதே இதற்கான அடிப்படைக் காரணம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுத்து சிறு பான்மை மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் அப்துர் ரஹ்மான் கேட்டுக் கொண்டுள்ளார்.