இந்த மூன்று தீர்வுகளைத் தவிர வேறு ஏதாவது நியாயமான தீர்வுகள் யாரிடமாவது இருந்தால் முன்வையுங்கள்

Dr. நாகூர் ஆரீப் – சாய்ந்தமருது 

 

 காலம் கடந்து நித்திரை கொண்டெழும்பியது போல பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.

சரி. பரவாயில்லை. பேச்சுவார்த்தையின் முடிவுகளாக எட்டப்படக்கூடியவை பின்வருவனவற்றை விட வேறு என்னவாக இருக்கலாம்?

தீர்வு 01)

சாய்ந்தமருது தமது முப்பது வருட காலக்கோரிக்கையை கைவிடுதல்-
இந்த முடிவு சாய்ந்தமருது மக்களால் ஏற்றக்கொள்ள முடியாததாக இருக்கும். ஏனெனில், அதற்கான பயணத்தில் நீண்ட தூரத்தைக் கடந்துவிட்டார்கள். இவ்வாறான முடிவை எடுக்கும் விதமாக கடந்த கால வரலாறு இருக்கவில்லை என்பது யதார்த்தம்.

தீர்வு 02)

கல்முனையை நான்காகப் பிரித்தல்
சமகால நிகழ்வுகளின் அடிப்படையிலும், சமகால அரசியல் அதிகாரம் அல்லது சுழியோட்டத்தின் அடிப்படையிலும், வியாக்கியானத்துக்காக யார் என்ன சொன்னாலும் கல்முனையை நான்காகப் பிரிப்பது என்பது கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கின்றதொரு தீர்வாகும். காலதாமதம் இன்னுமின்னும் நிலைமையைச் சிக்கலாக்குமே தவிர, பிரச்சினையைத் தணிக்கும் ஒன்றாக இருக்காது என்பது தான் உண்மை.

தீர்வு 03)

  கல்முனையை இரண்டாகப் பிரித்தல் அதாவது சாய்ந்தமருது பிரிந்து செல்லுதல்-
இது தான் தற்போதைக்கு களநிலவரப்படி உள்ளங்கையில் உள்ள சாத்தியமான தீர்வாகும். பறிபோகும் என்ற வியாக்கியானத்தை விட, கட்சிகளை ஒன்றுபடுத்தி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பெரும்பான்மையைப் பெறுவது இயலாத காரியமில்லை.

தங்களின் சுயநலத்திற்காக இரண்டு கட்சிகளும் ஒரு தேசியக் கட்சியின் சின்னத்தில் இணைந்து ஒன்றாகப் போட்டியிட முடியுமென்றால், கல்முனையில் ஒரு நல்ல விடயத்திற்காக ஏன் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் நின்று பெரும்பான்மையை உறுதிசெய்ய முடியாது? மக்களை ஏன் ஓரணியில் ஒன்றுபடுத்த முடியாது? முடியாது என்றால் அது இயலாமையைக் காட்டும். இயலாதவர்கள் தோற்றுவிடுவது போல, ஒற்றுமைப்பட முடியாதவர்களுக்கு சபை எதற்கு???

இந்த மூன்று தீர்வுகளைத் தவிர வேறு ஏதாவது நியாயமான தீர்வுகள் யாரிடமாவது இருந்தால் முன்வையுங்கள். ஆராய்வோம்.