நாளை நண்பகலுக்குள் பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் : அமைச்சர் அர்ஜூன

நாளை வியாழக்கிழமை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்றிரவு 11 மணிக்கு எரிபொருளை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கப்பலின் நகர்வு தொடர்பாக செய்மதி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இன்றிரவு 9 மணிக்கு கப்பல் துறைமுகத்தை அடைந்து விடும் என்று தெரியவந்துள்ளது.

 

இன்றிரவு துறைமுகத்தை கப்பல் அடைந்ததும் உடனடியாக அதனை இறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளை நண்பகல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும். இந்தக் கப்பலில் எடுத்து வரப்படும் எரிபொருள் தரமானது என்றும், அது ஏற்கனவே இரண்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் இருந்து இரண்டு கப்பல்களில் எரிபொருள் எடுத்து வரப்படுவதாக தெரிவித்தார். ஜனாதிபதியும் நானும், இந்தியத் தூதுவருடன் பேச்சு நடத்தினோம். இரண்டு கப்பல்களின் எரிபொருளை அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.அவை இன்று வந்து சேர்ந்து விடும். பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.