நாட்டின் அமைச்சரவையில் கூட்டமைப்பினர் கட்டாயம் அங்கம் வகிக்க வேண்டும்: அமைச்சர் பாட்டலி சம்பிக்க

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு வடக்கு மக்களுக்கு சேவையாற்றுமாறு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அமைச்சர்களாக இருக்கும் சில அரசியல்வாதிகளை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் நேர்மையானவர்கள் என நம்புவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், நாட்டின் அமைச்சரவையில் கூட்டமைப்பினர் கட்டாயம் அங்கம் வகிக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பது வடக்கு மக்களுக்கு பெரிய அநீதி. கூட்டமைப்பின் தலைவர்கள் அரசாங்கத்தில் இணைவதன் மூலம் மாத்திரமே இந்த நிலைமையை தவிர்க்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கூட அமைச்சர் பதவிகளை பெற்று பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருந்தாகவும் அந்த சந்தர்ப்பத்தில் கூட சிலர் சந்தேகத்துடன் பார்த்ததன் காரணமாக அந்த சிறப்புரிமைகளை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் பதவிகள் தேவையில்லை எனவும் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற தேவையே தமக்கு இருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.